அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்க உள்ள படம், பான் வேர்ல்ட் எனும் அளவில் வெளியிடப்படும் திட்டத்தில் உள்ளது. இதற்காக, சர்வதேச அளவில் பிரபலமான ஒரு கதாநாயகியை இந்தப் படத்தில் நடிக்க வைக்கவேண்டும் என அவர்களால் தேடப்படுகின்றனராம்.இதற்காக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை அணுகி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தற்போது அவர் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபுவுடன் நடித்து வருவது இதற்கான ஒரு காரணமாகும். இருப்பினும், அல்லு அர்ஜுனின் படத்தில் நடிக்க அவர் மறுப்புத் தெரிவித்துவிட்டாராம்.

ராஜமவுலியின் படத்தில் ஒப்பந்தம் செய்யும் போதே, அவருக்கு அழைக்கப்படும் நாட்களில் படப்பிடிப்பில் கட்டாயமாக இருக்க வேண்டும் என்ற வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால், அல்லு அர்ஜுனின் படத்திற்கு நேரம் ஒதுக்க முடியாததால் அவர் ‘நோ’ சொன்னதாக கூறப்படுகிறது. மேலும், ஹிந்தி திரைப்படமான ‘க்ரிஷ் 4’ல் நடிக்கவும் அவர் சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே, தேவையற்ற சிக்கல்கள் ஏற்படாமல் இருக்கவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அல்லு அர்ஜுனுடன் இதற்கு முன்பு நடித்த நடிகைகளை மீண்டும் ஜோடியாக்க வேண்டாம் என்று அட்லி கூறியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச புகழ்பெற்ற நடிகைகளை தேர்வு செய்யப்போகிறார்களா அல்லது சமந்தா, ஜான்வி கபூர் போன்ற இந்திய நடிகைகளையே தேர்வு செய்யப்போகிறார்களா என்பது விரைவில் தெரியவரும் என கூறப்படுகிறது.