தற்போது, நலன் குமாரசாமி இயக்கும் “வா வாத்தியார்” மற்றும் பி.எஸ். மித்ரன் இயக்கும் “சர்தார் 2” படங்களில் நடித்திருக்கும் கார்த்தி, தொடர்ந்து அசத்தலான படங்களின் வரிசையை வைத்துள்ளார். “டாணாக்காரன்” இயக்குனர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி 29 படத்தில் நடிக்க உள்ளார். அதேசமயம், லோகேஷ் கனகராஜ் மற்றும் மாரிசெல்வராஜ் இயக்கும் படங்களிலும் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில், காதல் மற்றும் ஆக்ஷன் கலந்த கதையை கொண்ட ஒரு புதிய படத்திற்கும் ஓகே சொல்லியுள்ளார்.

“வா வாத்தியார்” படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோடை சீசனில் வெளியிடும் நோக்கில் படத்தின் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் கார்த்தி, எம்.ஜி.ஆர்.-ன் தீவிர ரசிகராக நடிக்கிறார். மேலும், சத்யராஜ், ராஜ்கிரண், கீர்த்தி ஷெட்டி, ஆனந்தராஜ், ஷில்பா மஞ்சுநாத் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை சந்தோஷ் நாராயணன் அமைத்துள்ளார்.
“வா வாத்தியார்” படத்தை தொடர்ந்து, “சர்தார் 2” படத்திற்காக கார்த்தி தனது டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். படப்பிடிப்பின் மீதியுள்ள பகுதிகள் தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இதில் எஸ்.ஜே. சூர்யா, ஆஷிஷ் வித்யார்த்தி, ரஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சென்னையில் பிரமாண்டமான செட்கள் அமைத்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
முந்தைய “சர்தார்” படத்தில் டபுள் ஆக்ஷன் கார்த்தியின் தோற்றம் ரசிகர்களை ஈர்த்தது போல, இந்த படத்திலும் அவருடைய அசத்தலான லுக்குகள் கவனத்தை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இதுவரை படப்பிடிப்பின் 80% முடிந்துவிட்டது என கூறப்படுகிறது. சென்னையில் நடந்த படப்பிடிப்பிற்குப் பிறகு, மைசூரில் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. அந்தப் பகுதிகளில், ஒரு ஆக்ஷன் காட்சி படப்பிடிப்பு நடைபெறும்போது, கார்த்தியின் கால் காயமடைந்தது. தற்போது, அவர் ஓய்வில் இருக்கிறார்.ஆனால், “சர்தார் 2” படப்பிடிப்பு மற்ற நடிகர்களை வைத்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.