
நடிகர் கவின் நடித்துள்ள ஸ்டார் படத்தை இளன் இயக்குநர் இயக்கியுள்ளார்.இந்த ஸ்டார் படம் வரும் மே 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த ஆண்டு இதுவரை வெளியான படங்கள் எதுவும் வெளியீட்டுக்கு முன்பு பெரிய அளவில் ப்ரீ ரிலீஸ் வசூல் ஈட்டவில்லை. ஆனால், கவினின் இந்த படம் அதிக வசூல் பார்க்கத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு கவின் நடித்த டாடா படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. விஜய் டிவி-ல் இருந்து சிவகார்த்திகேயனுக்கு பிறகு தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய ஸ்டார் கிடைத்துள்ளார் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஸ்டார் படத்தின் ட்ரைலரில், காசுக்காக கஷ்டப்படும் ஹீரோவாக கவினைக் காட்டியிருப்பார்கள். சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் காசு எவ்வளவு பெரிய சிக்கலைத் தருகிறது என்பதை ஸ்டார் திரைப்படம் தெளிவாக உணர்த்துவதாக தெரிகிறது. நடிகர் கவினும் ஆரம்ப காலகட்டத்தில் காசுக்காக மிகவும் கஷ்டப்பட்டுள்ளதாக தனது புதிய பேட்டியில் கூறியுள்ளார்.
எனக்குக் கிடைத்த நண்பர்கள் மிகவும் நல்லவர்கள். மற்றவர்களுக்கு அப்படி கிடைபார்ளா என்பது தெரியவில்லை. சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்தபோது, எனது அனைத்து செலவையும் பார்த்துக் கொண்டிருந்த நண்பர்களே என் ஆதரவாக இருந்தனர். ஒரு கட்டத்தில், ஒரு நண்பன் தனக்குத் திருமணம் நடக்கப் போவதாகவும், என் செலவை நானே பார்த்துக் கொள்ளுமாறு கேட்டான். அப்போதுதான் அவனது கஷ்டம் புரிந்தது. சீரியலில் நடிக்கத் தொடங்கினேன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றேன் என்றும் கவின் அந்தப் பேட்டியில் உணர்ச்சிபூர்வமாகப் பேசியுள்ளார்.