பிரபல மருத்துவரும் சிவாஜியுடன் நெருங்கி நண்பராக விளங்கியவருமான டாக்டர்.காந்தராஜ் சமீபத்தில் ஒரு யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, “சிவாஜி கணேசனுக்கு மத்திய அரசு சரியான அங்கீகாரம் கொடுக்கவில்லையே ஏன்?” என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு காந்தராஜ் அளித்த பதில் சுவாரஸ்யமானது:
“நான் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தபோது வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த மூவர் பயிற்சிக்கு வந்திருந்தனர். அப்போது அவர்கள் ஒரு முறை கீழ் வானம் சிவக்கும் என்ற சிவாஜி கணேசனின் படத்தை பார்க்கச் சென்றனர்.
மறு நாள் என்னிடம், ‘அந்த படத்தில் ஒருவர் டாக்டராக நடித்திருந்தாரே… அற்புதமான நடிப்பு… அவரை நாங்கள் நேரில் சந்திக்கவேண்டும்’ என்று ஒற்றைக் காலில் நின்றார்கள்.
அவர்களை சிவாஜியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றேன். ஆனால் அன்று அவர், ஊரில் இல்லை. ஆகவே சந்திக்க முடியவில்லை.
ஆனாலும் என்ன.. ஒரு படத்தைப் பார்த்துவிட்டு நெகிழ்ந்து போய் அவரை பார்த்தே ஆகவேண்டும் என வெளிநாட்டுக்காரர்கள் மூவர் நினைத்தார்களே… இதுதான் சிவாஜிக்கு கிடைத்த உலக அங்கீகாரம்.
மற்ற அங்கீகாரங்கள் தேவையில்லையே..” என்றார் மருத்துவர் காந்தராஜ்.