ஒடியன் டாக்கீஸ் சார்பில் தயாரிப்பாளர் K.அண்ணாதுரையின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘துடிக்கும் கரங்கள்’.
இந்தப் படத்தில் விமல் கதாநாயகனாக நடித்துள்ளார். மிஷா நரங் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தை இயக்குநர் வேலுதாஸ் இயக்கியுள்ளார். மேலும் வேலுதாஸ் மற்றும் காளிதாஸ் இருவரும் இணை தயாரிப்பாளர்களாக இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க கட்டிடத்தில் பிரபல இயக்குநர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் எழில், லிங்குசாமி, பேரரசு, ரமேஷ்கண்ணா, புவனா, சந்தோஷ் மற்றும் திருச்சி மாவட்ட வினியோகஸ்தர் ஜின்னா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் இயக்குநர் பேரரசு பேசும்போது, ‘இந்தப் படத்தின் தயாரிப்பாளர் “நான் கதை கேட்கவே இல்லை” என்று கூறினார். இன்றைக்கு எந்த தயாரிப்பாளரும் கதை கேட்பதில்லை. ஹீரோவுக்கு பிடித்திருந்தால் மட்டும் போதும் என்கிற சூழல் நிலவுகிறது.
லிங்குசாமி, எழில் மற்றும் என்னை போன்ற கிட்டத்தட்ட 43 உதவி இயக்குநர்களை இயக்குநராக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, அவரது ஒவ்வொரு படத்திற்கும் அவரே கதை கேட்பார். அதன் பிறகுதான் அந்தக் கதைக்கு பொருத்தமான ஹீரோவிடம் கதை சொல்ல அனுப்பி வைப்பார். அதனால் தொடர்ந்து வெற்றி கிடைத்தது. இப்போது நூறாவது படத்தை தயாரிக்க போகிறார். ஆனால் இன்று ஹீரோவுக்கு மட்டும் கதை பிடித்துவிட்டால் போதும் என நிலைமை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது.
நான் இந்த படத்தைப் பார்த்துவிட்டேன். ஒரு புது இயக்குநரின் படம் போலவே தெரியவில்லை. திரைக்கதையை சரியாக கையாண்டுள்ளார் இயக்குநர் வேலுதாஸ். இயக்குநர் வேலுதாஸ், ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற ஒரு நல்ல இடத்திற்கு வருவார். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்..” என்றார்.