சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘லவ் டுடே’ படத்தின் தலைப்புக்காக அந்தப் படத்தின் பெயரில் முதலில் படம் இயக்கிய இயக்குநரான ‘லவ் டுடே’ பாலசேகரனுக்கு நன்றி தெரிவிக்காதது திரையுலகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் வெளிவந்த ‘லவ் டுடே’ படத்தை இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்திருக்கிறார். இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில் இந்தப் படத்தின் கதையும், திரைக்கதையும், இயக்கமும் இருப்பதால் படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.
இதே ‘லவ் டுடே’ என்ற பெயரில் 1997-ம் ஆண்டு ஒரு திரைப்படம் வெளிவந்தது. அந்தப் படத்தை தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தயாரிதிருந்தார். விஜய், சுவலட்சுமி, மந்த்ரா, ரகுவரன் ஆகியோர் நடித்திருந்தனர்.
அந்தப் படம் அப்போது பெரிய வெற்றியைப் பெற்றதால் அப்படத்தை இயக்கிய இயக்குநர் பாலசேகரன் இன்றுவரையிலும் ‘லவ் டுடே’ பாலசேகரன் என்றே அழைக்கப்பட்டு வருகிறார்.
இவர் இந்தப் படத்திற்குப் ‘துள்ளித் திரிந்த காலம்’, ‘ஆர்யா’ ஆகிய தமிழ்ப் படங்களையும், தெலுங்கில் சில படங்களையும் இயக்கியுள்ளார்.
எப்போதும் ஒரு படத்தின் தலைப்பை அதன் இயக்குநர்கள்தான் முடிவு செய்வார்கள். அந்தவிதத்தில் இயக்குநர் பாலசேகரன் தேர்வு செய்து வைத்த தலைப்புதான் ‘லவ் டுடே’.
இந்தத் தலைப்பை மீண்டும் பயன்படுத்த அப்படத்தின் தயாரிப்பாளரான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஆர்.பி.சவுத்ரியிடமிருந்து எழுத்து மூலமாக அனுமதியைப் பெற்றுதான் வைக்க முடியும்.
அப்படித்தான் முறைப்படி அனுமதி பெற்று பிரதீப் ரங்கநாதன் தன் ‘லவ் டுடே’ படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தின் டைட்டில் போடும்போது அதன் தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி, இந்தப் படத்தின் டைட்டிலில் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி, மற்றும் படத்தின் கதாநாயகனான விஜய் ஆகியோருக்கு நன்றி என்று கார்டு போட்டுள்ளார்கள். ஆனால் இந்தத் தலைப்பை யோசித்து வைத்திருந்த இயக்குநர் பாலசேகரனுக்கு நன்றி கார்டு போடவில்லை.
இது குறித்து பழைய ‘லவ் டுடே’ படத்தில் இயக்குநர் பாலசேகரனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவரும், எழுத்தாளர், இயக்குநருமான அஜயன் பாலா அவரது பேஸ்புக்கில் தனது வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அஜயன் பாலா இது குறித்து எழுதியிருப்பது இதுதான் :
“நேற்று ‘லவ் டுடே-2022’ பார்த்தேன். தியேட்டரில் தீபாவளி கொண்டாடுகிறார்கள். நடிகர், இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு வாழ்த்துக்கள். நேரடி ஆபாச வசனங்களை தவிர்த்து இருக்கலாம்.
படத்தில் டைட்டிலில் நான் உதவியாளராக பணி புரிந்த விஜய் நடித்த ‘லவ் டுடே’ படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரிக்கு நன்றி சொன்ன இயக்குநர், கூடவே இயக்குநர் பாலசேகரனுக்கும் ஒரு நன்றியை சொல்லியிருக்கலாம். விசாரித்தபோது அவரிடம் இது குறித்து ஒரு மரியாதை நிமித்தம்கூட யாரும் அனுமதி கேட்கவில்லையாம். டேட்டா உலகில் இன்று தலைப்புதான் ஒரு படைப்பின் அடையாளம். பொதுவாக அவரை ‘லவ் டுடே’ பாலசேகரன் என அழைப்பார்கள். இனி அவரை அப்படி அழைக்க தயங்குவார்கள்..” என்று குறிப்பிட்டுள்ளார் அஜயன் பாலா.