‘சி.எஸ்.கே.’ படத்தை இயக்கிய இயக்குநரான எஸ்.சத்தியமூர்த்தி, அடுத்து ஹாரர் படம் ஒன்றை இயக்குகிறார்.
இந்தப் படத்தை ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜி.டில்லி பாபு தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில், முனிஷ்காந்த், பூர்னேஷ், லாஸ்லியா, அவந்திகா, ஷாஷ்வி உட்பட பலரும் நடிக்கின்றனர்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு கடந்த திங்கட்கிழமையன்று நடந்தது.
இந்தப் படம் பற்றி இயக்குநர் எஸ்.சத்தியமூர்த்தி பேசும்போது,. “இது சஸ்பென்ஸ் – ஹாரர், த்ரில்லர் படம். பேய் படம் என்றாலும் வழக்கமானதாக இருக்காது. இதில் முதல் முறையாக ‘பயோனிக் ஹேண்ட்’ என்ற முறையை பயன்படுத்தப் போகிறோம். அதாவது செயற்கை கை. அந்தக் கை படத்தில் என்னவிதமான பிரச்னையை ஏற்படுத்துகிறது என்பதுதான் படத்தின் கதை.
சீரியஸான பேய் படமாக உருவாகும் இதன் திரைக்கதையில் பல திருப்பங்கள் இருக்கும். இந்தப் படத்துக்காக 20, 25 வருட கால பழமையான பாழடைந்த மருத்துவமனை தேவைப்பட்டது. விமான நிலையம் அருகே ஒரு கட்டிடத்தை அப்படி மாற்றி இருக்கிறோம். இந்தக் கட்டிடமே பயத்தை ஏற்படுத்துவதுபோல இருக்கும்…” என்றார்.




