விஜய் டி.வியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பிரபலம். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலர் திரைப்பட வாய்ப்புகளை பெற்று உள்ளனர்.
சமீபத்தில் அப்படி திரை ஹீரோ ஆனவர் முகேன். மலேசியாவைச் சேர்ந்த இவர் பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்துகொண்டு வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தன.
இவரைத் தொடர்ந்து பிக்பாஸ் மூலம் திரைத்துறைக்கு வந்திருப்பவர், பாலா. பிக்பாஸ் நான்காவது சீசனில் அல்டிமேட் டைட்டில் வென்ற இவர் புதிய படத்தில் நடிக்கிறார். படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர்.
இது குறித்து பாலா, “ என் லட்சியம் திரைத்துறையில் நடிக்க வேண்டும் என்பதுதான். ஆனால் சிறுவயதில் இதைச் சொன்னபோது என்னை ஊக்கப்படுத்தியவர்களும் உண்டு.. கிண்டல் செய்தவர்களும் உண்டு. பாராட்டையும் சரி, இகழ்ச்சியையும் சரி.. சரி சமமாக எடுத்துக்கொண்டு எனது இலக்கை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தேன். இன்று இலக்கை அடைந்திருக்கிறேன். ஆனால் இதோடு பயணம் முடிந்துவிடாது. இது ஒரு புதிய பயணத்தின் தொடக்கம்” என்று கூறியிருக்கிறார்.
பரவாயில்லை.. தத்துவம் போல் கூறினாலும் தன்னம்பிக்கை வார்த்தைகள்!