இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ‘பீஸ்ட்’ படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை.
திரைக்கதை சரியில்லை என்றும், விஜய்க்கு வில்லனாக கவனம் ஈர்க்கும் நடிகரை போடவில்லை என்றும் விஜய்யின் ரசிகர்கள் கமெண்ட் அடித்திருந்தனர்.
இந்த சூழலில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த ‘விக்ரம்’ படம் எதிர்பாராதவிதமாக மெகா ஹிட்டானது. இந்த சமயத்தில் நெல்சனை விஜய்யின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விஜய்க்கு மட்டும் தோல்வி படத்தைக் கொடுத்துவிட்டதாகச் சொல்லி திட்டித் தீர்த்தனர். “ஒரு இயக்குநர் தோல்வி படம் கொடுப்பது இயல்புதான். அதற்காக நெல்சன் எல்லை மீறி விமர்சிக்கப்படுகிறார்” என்று அவருக்கு ஆதரவாகவும் சிலர் பேசினர்.
இதன் பின்பு இதே ‘பீஸ்ட்’ படத்தில் வில்லனாக நடித்திருந்த மலையாள நடிகரான சாக்கோ சமீபத்தில் கொடுத்திருக்கும் பேட்டி திரையுலகத்தில் விவாதமாகியுள்ளது.
தனியார் TV சேனல் ஒன்றுக்கு சாக்கோ அளித்த பேட்டியில், “பீஸ்ட் படம் தமிழிலேயே வெற்றி பெறவில்லை. எனக்கும் நல்ல அறிமுகமாக அமையவில்லை. நான் இன்னும் அந்த பீஸ்ட் படத்தை பார்க்கவில்லை. பீஸ்ட் படம் தொடர்பான மீம்ஸ்களையும், ட்ரோல்களையும்தான் பார்த்திருக்கிறேன்.
ஒருவரை அடித்து தூக்கி வரும்போது, அவரது எடைக்கு ஏற்றவாறு, அவரை தூக்கி வருபவர் தான் சிரமப்படுவதை தன்னுடைய முகத்தில் ரியாக்ஷனாக காண்பிக்க வேண்டும். ஆனால், இந்தப் படத்தில் ஏதோ ஒரு பேப்பரை அசால்ட்டாகத் தூக்கி வருவதுபோல விஜய் என்னைத் தூக்கி வருவார்.
இதுவெல்லாம் சேர்ந்துதான் படத்திற்கு நிறைய விமர்சனங்களை சம்பாதித்துக் கொடுத்துள்ளது. இதற்காக விஜய் சாரை குறை சொல்ல முடியாது. படக் குழுதான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
நடிகர் சாக்கோவின் இந்தப் பேச்சு விஜய் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையையும், விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.