பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.லக்ஷ்மன் குமாரின் தயாரிப்பில், கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்க, பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘சர்தார்’.
இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை வடபழனி போரம் மாலில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கார்த்தி பேசும்போது, “இந்தப் படத்திற்காக இயக்குநர் மித்ரன் உருவாக்கிய கதாபாத்திரத்திற்கு அனைவருமே மிகவும் பொருந்தினார்கள். குறிப்பாக பெண்கள் சரியாகப் பொருந்தினார்கள். லைலா கதாபாத்திரத்திற்கு புதிதாகவும் இருக்க வேண்டும். அதே சமயம் உறுதியாகவும் இருக்கும் வேண்டும் என்று மித்ரன் கூறினார். அப்போது லைலாவிடம் பேசினேன். அவர் ‘பிதாமகனி’ல் பார்த்தது போலவேதான் இன்னமும் அப்படியே இருக்கிறார். அவர் உடனே ஒப்புக் கொண்டு வந்தது படத்திற்கு பெரிய பலம் சேர்த்தது.
பிறகு ராஷி கன்னா வந்தார். அவர் வந்ததும் இப்படத்தை கமர்சியல் என்று சொல்லிவிடக் கூடாது என்ற பயம் வந்தது. ராஷி நம்ம ஊர் பெண்ணாக மாறுவதற்கு கடின முயற்சி எடுத்தார். அவரது கதாபாத்திரத்தை புரிந்துகொண்டு சௌகார்பேட்டை பெண்ணாக கதையோடு ஒன்றி மாறினார்.
ரெஜிஷா முதல் நாள் படப்பிடிப்பிலேயே அவருடைய பாத்திரத்தைப் புரிந்துகொண்டு கதாபாத்திரமாகவே வந்தார். “என்னம்மா.. 100 நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டது போல, முதல் நாளிலேயே வந்திருக்க?” என்று கேட்கும்படி அழகாக உள்ளே வந்தார்.
முனீஸ்காந்த் சார் அருமையான நடிகர். அவர் அருகில் இருந்து அவரை ரசித்துக் கொண்டே இருந்தேன். வி.கே.ராமசாமி சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எது பேசினாலும் அழகாக இருக்கும். சும்மா நின்று கொண்டிருந்தாலே அவ்வளவு அழகாக இருக்கும். அவரை மாதிரிதான் முனீஸ்காந்த் சாரையும் பார்த்தேன்.
படத்தில் என்னுடைய சித்தப்பாவாக நடித்திருக்கிறார். சின்ன சின்ன விஷயங்களை அவர் செய்வதே அழகாக இருக்கும். அவருடன் பணியாற்றியதில் உற்சாகமாக இருந்தேன்.
வில்லனாக நடித்த சங்கி சாருக்கு நன்றி. மித்ரன், “முதலில் வில்லன் கதாபாத்திரம் எழுதிவிட்டுத்தான் மற்ற பாத்திரங்களை எழுதுவேன்..” என்றார். வில்லன் பாத்திரம் எப்படி சிந்திப்பான்.. அவனுடைய சித்தாந்தம் என்ன என்பதை கூர்ந்து எழுதியிருக்கிறார். “எனக்கு இரட்டை வேடம் ஆகையால், வில்லனைவிட என்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்” என்று மித்ரனிடம் கூறினேன்.
திலீப் மாஸ்டருடன் நிறைய ஒத்திகை பார்த்தோம். இறுதியாக படம் பார்க்கும்போது நன்றாக வர வேண்டும் என்பதற்காக அனைவருமே கடினமாக உழைத்தார்கள்.
இப்படம் நன்றாக வருவதற்கு ஜி.வி.யும் முக்கிய காரணம். அவர் அமைத்துக் கொடுத்த தீம் இசை இப்படத்திற்கு ஒரு தரத்தைக் கொடுத்தது. படப்பிடிப்பிலும் அவருடைய இசையை கேட்டுத்தான் காட்சிகள் அமைத்தோம்.
ஒவ்வொரு வேடம் போடுவதற்கும் இரவு, பகலாக என்னுடன் பணியாற்றிய பிரவினுக்கு நன்றி. அனைத்து உதவி இயக்குநர்களுக்கும் நன்றி. பல பேருக்கு இரவு பகல் பாராது உழைத்ததில் உடல் நலம் சரியில்லாமல்போய் பெரிதும் அவதிப்பட்டார்கள். அவர்கள் அனைவருக்கும் மிகப் பெரிய நன்றி.
இது உளவாளி படம் என்பதால் ஜேம்ஸ்பாண்ட் படம் மாதிரி பிகினியும், சிக்ஸ் பேக்கும் இருக்குமா? என்று கேட்காதீர்கள். இது இந்தியன் ஸ்பை த்ரில்லராக இருக்கும். குடும்பத்தோடு வந்து பார்க்கலாம்…” என்றார்.