நடிகை சுனைனா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படம் ‘ரெஜினா’. இந்தப் படத்தைத் தயாரிப்பாளர் சதீஷ் நாயர் தயாரித்துள்ளார். இவரே இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இயக்குநர் டோமின் டி.சில்வா இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.
ஒளிப்பதிவு – பவன் K.பவன், இசை – சதீஷ் நாயர், பாடல்கள் – யுகபாரதி, விவேக், வேல்முருகன், விஜயன் வின்சென்ட், இஜாஸ்.R, ஹரி நாகேஷ், பாடகர்கள் – வந்தனா சீனிவாசன், கல்பனா, சின்மயி, ரம்யா நம்பீசன், கலை இயக்கம் – கமருதீன், படத் தொகுப்பு – டோபி ஜான், ஆடை வடிவமைப்பு – ஏகன், மக்கள் தொடர்பு – ஜான்ஸன்.
இந்த ‘ரெஜினா’ படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. மிக விரைவில் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைய உள்ளது.
இந்த நிலையில் இந்த ‘ரெஜினா’ படம் பற்றி இந்தப் படத்தின் தயாரிப்பாளரும், இசையமைப்பாளருமான சதீஷ் நாயர் பத்திரிகையாளர்களிடத்தில் பேசினார்.

அவர் பேசும்போது, “திரைப்படம் என்பது என்னுடைய புது முயற்சி. ஒன்றரை வருடத்திற்கு முன்பு ‘எஸ்.என்’ என்ற பெயரில் யூ டியூப் சேனலை ஆரம்பித்து அதில் சுயாதீனப் பாடல்களைப் பதிவேற்றி வந்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அப்போது ஒரு நாள் எனது நண்பரும், இப்படத்தின் இயக்குநருமான டோமின் டி.சில்வா இப்படத்தின் கதையை என்னிடம் கூறினார். அந்தக் கதையைக் கேட்டவுடன் இந்தப் புதிய முயற்சியில் இறங்கலாமே என்று எனக்குள் தோன்றியது.
ஏனெனில், என்னுடைய இசைத் திறமையை வெளிப்படுத்த திரையுலகத்தில் ஒரு வாய்ப்பு வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. அதைவிட என் இசைக்குப் பொருத்தமான ஒரு நல்ல கதையும் வேண்டும் என்று நினைத்துக் காத்திருந்தேன். இதற்கான சந்தர்ப்பம் இப்படி வந்ததால் உடனேயே இப்படத்தைத் துவக்கிவிட்டேன்.
இப்படம் ஒரு பழி வாங்கும் திரில்லர் படம். சராசரியான குடும்பப் பெண் ஒருவர் காணாமல் போன தனது கணவனைத் தேடும் கதைதான் இப்படம். பண பலம், ஆள் பலம்.. இப்படி எந்தத் துணையும் இல்லாமல் ஒரு பெண் எப்படி தனது கணவனைக் கண்டு பிடிக்கிறாள் என்பதுதான் இப்படத்தின் கதை.
கணவன், மனைவிக்குள் இருக்கும் ஆபாசமில்லாத, அழகான காதலை பதிவு செய்யும்விதமாக இப்படம் இருக்கும். மேலும், இப்படம் யதார்த்தமான படம். ஒரு சராசரியான பெண்ணால் என்ன செய்ய முடியுமோ அதை மட்டுமே வைத்து எடுத்திருக்கிறோம்.

முதலில் இந்த கதை உருவானவுடன் இந்தக் கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் யார் என்று நாங்கள் தேடினோம். அப்பாவியான முகமும் இருக்க வேண்டும். அதிலிருந்து தன்னை முழுமையாக மாற்றி போராடக் கூடியவிதமாகவும் இருக்க வேண்டும் என்ற கதாபாத்திரத்திற்கு நடிகை சுனைனாதான் பொருத்தமாக இருப்பார் என்று எங்களுக்குத் தோன்றியது. அவருடைய படங்களை நான் பார்த்திருக்கிறேன். ஒரு அப்பாவித்தனம் எப்போதும் அவர் முகத்தில் நிலைத்திருக்கும். அதனாலேயே அவரை நாயகி வேடத்திற்குத் தேர்வு செய்தோம்.
இயக்குநர் முதலில் என்னிடம் கதை சொன்னபோதே, “பாடல்கள் தேவைப்பட்டால் படத்தில் வைத்துக் கொள்ளலாம்…” என்று எண்ணினேன். ஆனால் பின்பு கதை, திரைக்கதை முழுமையான பின்பு பாடல்கள் அவசியம் தேவை என்றே தெரிந்தது.
இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் கதையோடு பயணிக்கும் வகையில்தான் இருக்கும். படத்தில் இருக்கும் 5 பாடல்களும் 5 விதங்களில் இருக்கும். ஆனால், கதைக்குப் பொருந்தும்வகையில்தான் இருக்கும்.
‘சூறாவளி’ எனத் தொடங்கும் பாடலின் டியூனை நான் சுயாதீனப் பாடலுக்காக சேமித்து வைத்திருந்தேன். அப்பாடல் ஒரு அம்மாவும், மனநிலை குன்றிய பெண்ணிற்குமான பாடலாக வைத்திருந்தேன். இந்த இசையைக் கேட்டதும் இயக்குநர், “இதை இந்தப் படத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றார். அப்படியே வைத்துவிட்டோம்.
இப்படத்தில் பல திருப்பங்கள் இருக்கும். மற்றும் மியூசிக் திரில்லராகவும் இருக்கும். இருக்கை நுனியில் அமர்ந்து பார்க்கக் கூடிய வகையில் திரைக்கதை மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.
பொள்ளாச்சியில் ஆரம்பித்து கேரளாவின் பல பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. இன்னும் 4 அல்லது 5 தினங்களில் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிடும்.
இப்படத்தை திரையரங்கில் வெளியிடுவதா அல்லது ஓடிடி-யில் வெளியிடுவதா என்று இன்னும் முடிவு செய்யவில்லை. படம் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நாளில் வெளியாகும்…” என்றார் தயாரிப்பாளரும், இசையமைப்பாளருமான சதீஷ் நாயர்.