‘விட்டுக் கொடுத்தலும், அப்படியே ஏற்றுக் கொள்ளுதலும்தான் அன்பு’… ‘அன்புதான் வாழ்வை நரகம் இன்றி நகர்த்தும் அற்புத காரணி’ என்பதை சொல்லிருக்கும் படம்தான் இந்த ‘ஹே சினாமிகா’.
நாயகன் துல்கர் சல்மானும், நாயகி அதிதி ராவும் கொச்சினில் உள்ள ஒரு ரெஸ்ட்ராண்டில் சந்திக்கிறார்கள். இந்த முதல் சந்திப்பே அவர்கள் இருவருக்குள்ளும் காதல் தீயைப் பற்ற வைக்க, உடனேயே திருமணம் செய்து செய்கிறார்கள்.
இரண்டு ஆண்டுகள் கடந்து, சென்னையில் வசிக்கும் அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளுடன் படம் துவங்குகிறது. இப்போதும் காதலிக்கும்போது இருந்த கொஞ்சல் துல்கரிடம் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் அதிராவிற்கு குறைந்திருக்கிறது. அதற்கான காரணம் துல்கரின் இடைவிடாத பேச்சு.
ஒரு சாயலில் ‘அந்நியன் அம்பி’ போல தெரிகிறார் துல்கர். ‘அக்கறை’ என்ற பெயரில் அவர் செய்யும் இனிப்பான செயல்கள் எல்லாம், நம்மை சுகர் பேஷண்ட் ரேஞ்சிற்கு தள்ளி விடுகிறது.
பொறுமை இழக்கும் அதிதி, தனக்கு பாண்டிச்சேரியில் ஒரு வருடம் வொர்க்கை மாத்தி வாங்கிவிட்டு துல்கருக்கு டாட்டா காட்டுகிறார். ஆனால் துல்கர் அங்கேயும் வந்து விடுகிறார். கடுப்பான அதிதி இவரைப் பிரிய ஒரு வழியை யோசிக்கிறார்.
மன நல ஆலோசகரான காஜலிடம் தன் கணவனை காதலில் வீழ்த்தச் சொல்கிறார் அதிதி. இதன் பின்பு அடுத்தடுத்து நடக்கும் சுவாரசியமான திருப்பங்கள்தான் மொத்தப் படமும்.
துல்கர் நம் பக்கத்து வீட்டுப் பையன் போல காட்சி அளிக்கிறார். அவரின் துரு துரு பேச்சு முதலில் சலிக்க வைத்தாலும் போகப் போக பிடித்து விடுகிறது. ஒரு கட்டத்தில் படத்தை மொத்தமாக கையில் எடுத்துக் கொண்டு கரை சேர்க்கிறார்.
நடிப்பில் காஜல் அகர்வாலைப் பின்னுக்குத் தள்ளி கெத்து காட்டுகிறார் அதிதிராவ். முக்கியமான காட்சி ஒன்றில் அசத்தி இருக்கிறார். மன உணர்வுகளை முகத்தில் கொண்டு வருவதில் அவருக்கு நிகர் அவரே..!
மன நல ஆலோசகராக வரும் காஜல் முகத்தில் அவ்வளவு சோர்வு.. அவ்வளவு முதிர்ச்சி. அவரது நடிப்பிலும் பெரிய எனர்ஜி இல்லை.
படத்தில் வரக் கூடிய மற்ற சின்னச் சின்ன கேரக்டர்கள் எல்லாம் ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.
படத்தின் முதன்மையான ஹீரோ மதன் கார்க்கிதான். மிகச் சிறப்பான வசனங்களை எழுதி இருக்கிறார். படத்தின் திரைக்கதையும் அவரே எழுதியிருக்கிறார்.
படத்தில் சிரிப்பிற்கு சிறிய பஞ்சம் இருந்தாலும் அதைத் தாண்டிய நிறைய சிறப்புகள் இருப்பது மறுப்பதிற்கில்லை.
படம் நெடுக நம் கண்களுக்கு அழகான பிரேம்களை காட்டி படத்தை அழகாக்கியிருக்கிறார் கேமராமேன். கோவிந்த் வசந்தா இசையில் படம் நெடுக காதல் ரசம். காதல் தவிர்த்த காட்சிகளில் அவரது இசை கொஞ்சம் தாளம் தப்புகிறது.
முதல் படம் என்ற எந்த தடுமாற்றமும் இல்லாமல் மேக்கிங்கில் ஒரு மெச்சூர்டை காட்டியிருக்கிறார் நடன இயக்குநரில் இருந்து பட இயக்குநராக பிரமோஷன் வாங்கியிருக்கும் பிருந்தா.
நடைமுறைக்கு பெரிய சாத்தியமில்லாத கதை என்று இதை ஒதுக்க முடியாதளவில் படத்தின் திரைக்கதை அமைந்திருப்பது படத்தின் பெரிய ப்ளஸ். முன் பாதியில் வரும் முதல் அரை மணி நேரம் நம்மை ரொம்பவே சோதிக்கிறது. அதற்கடுத்து வரும் நிகழ்வுகள்தான் நம்மை பாதிக்கிறது.
ஷார்ப் விசயத்தில் இன்னும் கவனமாக இருந்திருந்தால் ‘ஹே சினாமிகா’விற்கு ஆயிரம் ஹார்ட்டீன்கள் விட்டிருக்கலாம்..!
RATING : 3.5 / 5