Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

வலிமை – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தப் படத்தை ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனமும் போனி கபூரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

படத்தில் அஜீத்குமார் நாயகனாக நடித்துள்ளார். மேலும் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, பாணி, சுமித்ரா, அச்யுன்த் குமார், ராஜ் அய்யப்பா, புகழ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – நீரவ் ஷா, இசை – யுவன் சங்கர் ராஜா, கலை இயக்கம் – கே.கதிர், படத் தொகுப்பு – விஜய் வேலுக்குட்டி, சண்டை இயக்கம் – திலீப் சுப்பராயன், உடைகள் வடிவமைப்பு – அனுவர்த்தன், மக்கள் தொடர்பு – டி ஒன், சுரேஷ் சந்திரா, ரேகா, விளம்பர வடிவமைப்பு – ராகுல் நந்தா, இணை தயாரிப்பு – பி.ஜெயராஜ், வி.எஃப்.எக்ஸ்-ஹரிஹரசுதன், எழுத்து, இயக்கம் – ஹெச்.வினோத்.

சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘நேர் கொண்ட பார்வை’ படங்களுக்குப் பிறகு இயக்குநர் ஹெச்.வினோத்தின் இயக்கத்தில் வெளிவரும் 4-வது படம் இதுவாகும். வினோத்தின் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் 2-வது படம் இதுவாகும்.

மதுரையில் உதவி போலீஸ் கமிஷனராக இருக்கிறார் ‘அர்ஜூன்’ என்ற அஜீத்.  அம்மா, தம்பி, அண்ணன், அண்ணன் மனைவி என்ற கூட்டுக் குடும்பத்தில் வாழ்பவர். அஜீத் வேலையில்லா பட்டதாரியான பி.இ. படித்த தனது தம்பிக்கு சிபாரிசு கடிதம்கூட தர மறுக்கும் அளவுக்கு நேர்மையானவராக இருக்கிறார். ஆனால் வேலையில் சின்சியர் ஆபீஸர்.

கையில் சிக்கும் குற்றவாளிகளின் கையை உடைத்துவிட்டு அவர்களது குடும்பத்தினருக்கு பணம் கொடுத்து உதவி செய்யும் அளவுக்கு நல்லவர். இவருடைய அண்ணன் மெகா குடிகாரராக இருக்கிறார். இதனால், அந்தக் குடும்பமே இப்போது அஜீத்தை நம்பித்தான் இருக்கிறது.

இந்த நேரத்தில் சென்னையில் குற்றச் செயல்கள் அதிகரிக்கின்றன. செயின் திருடர்கள் ஒரு பக்கம்.. ஏன் எதற்கு என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கான கொலைகள்.. போதை மருந்து கடத்தல், போதை மருந்து விற்பனை என்று சென்னையில் குற்றங்கள் பெருகியிருக்கிறது.

இதைத் தடுப்பதற்கு திறமையான ஒரு அதிகாரி வேண்டும் என்று நினைக்கிறார் கமிஷனர் செல்வா. இந்த வேலைக்கு இவருக்கு அஜீத் சரியான தேர்வாக இருக்க சென்னைக்கு அழைக்கப்படுகிறார் அஜீத்.

அவரிடத்தில் இந்த வழக்கு ஒப்படைக்கப்படுகிறது. சோபியா’ என்ற ஹூமா குரேஷி சென்னையில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். ஏற்கெனவே அஜீத்தை ஒன் சைடாக லவ்விக் கொண்டிருக்கிறார். இவரும் இப்போது அஜீத்தின் டீமில் ஒருவராக இருக்கிறார்.

குற்றவாளிகள் ஹைடெக் டெக்னாலஜியைப் பயன்படுத்தி சாத்தானின் அடிமைகள்’ என்ற குழுமத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்தக் குழுமத்தை வில்லன் கார்த்திகேயா நடத்தி வருகிறார். ஈவிரக்கமில்லாமல் குழுவிற்குள் தவறு செய்பவர்களை எரித்துக் கொல்கிறார்.

செயின் திருட்டு, போதைப் பொருள் விற்பனை, கடத்தல் இந்த மூன்றுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை அறிந்த அஜீத் வில்லனை மிக எளிதாக கண்டறிகிறார். ஆனால், அதற்குள்ளாக வில்லன் அஜீத்தின் வீட்டுக்குள்ளேயே கை வைத்து அஜீத்தின் தம்பியை தன் பக்கம் இழுக்கிறான்.

வில்லனை கோர்ட்டில் ஆஜர்படு்தத அழைத்துச் செல்லும்போது ஏற்படும் களேபரத்தில் பலர் இறந்துபோக அஜாக்கிரதையாக இருந்தக் குற்றத்திற்காக அஜீத் பதவியிறக்கம் செய்யப்படுகிறார்.

வில்லன் கோஷ்டியுடன் சேர்ந்துவிட்ட தனது தம்பியை மீட்டுத் தருவதாக தனது தாயாரிடம் சத்தியம் செய்கிறார் அஜீத். “இந்தச் சத்தியத்தை அவர் செய்து முடித்தாரா..? இல்லையா..?” என்பது இந்தப் படத்தின் மீதமுள்ள திரைக்கதை.

அஜீத் வழக்கம்போல கனமான உடலுடன், தீர்க்கமான பார்வையுடன், ஒரு மசாலா பட ஹீரோவுக்கேற்ற கெத்தான தோற்றத்தில் படம் முழுவதும் வலம் வந்து தனது ரசிகர்களை சிலிர்க்க வைக்கிறார்.

அவர் வரும் காட்சிகளில் மொத்தக் கண்களும் அவரைச் சுற்றியே இருக்கும்படி திரைக்கதை அமைத்திருப்பதுதான் ஸ்பெஷல். கோபம், பாசம், கண்டிப்பு, கிண்டல் என்று அனைத்திற்கும் ஒரே மாதிரியான மாடுலேஷனில் பேசுவதுதான் நமக்குப் போரடிக்கிறது. கொஞ்சம் வித்தியாசத்தைக் காட்டுங்க சாமியோவ்..!

சண்டை காட்சிகளில் ரீல் இல்லாமல் நிஜமாக அவரே பைக்கை ஓட்டி, சாகசங்கள் செய்திருப்பது தெரிகிறது. இத்தனை ரிஸ்க் எடுத்து நடிப்பது என்பது வேறு நடிகர்களால் முடியாதுதான். இதற்காகவே இவருக்கு நமது பாராட்டுக்கள்.

வழக்கம்போல கொஞ்சம் சென்டிமெண்ட் காட்சிகளையும் வைத்திருக்கிறார்கள். அதிலும் அம்மா பாசம். தன்னால் முடிந்த அளவுக்கு நடிப்பிக் காண்பித்திருக்கிறார் அஜீத். அஜீத்தின் படத்தில் இதுதான் இருக்கும் என்பதால் நாம் இதற்கு மேல் எதிர்பாப்பதே தவறு..!

படத்தில் காதல் காட்சிகள் இல்லை. டூயட்டுகளும் இல்லை. ஆனால் நாயகியின் ஒரு தலைக் காதலை சில வசனங்கள் மூலமாகவே காட்டியிருக்கிறார் இயக்குநர். புல் அண்ட் புல் ஆக்ஷன் மூவி என்று சொல்லிவிட்டதால் இதற்கெல்லாம் நேரமேயில்லாமல் போய்விட்டது போலும்.

நாயகி ஹூமா குரேஷியை அந்த கூலிங் கிளாஸோடு தோன்றும்போதெல்லாம் “ஒரு டூயட்டை வைச்சுத் தொலைஞ்சிருந்தா என்னங்கப்பா…?” என்று நமக்குத் தோன்றுகிறது. இயக்குநருக்கு ஏன் தோணவில்லை என்று தெரியவில்லை. அஜீத்துக்கு இப்போதைய நாயகிகளில் மிகப் பொருத்தமான நாயகி ஹூமாதான் என்பது சில சில ஷாட்களிலேயே தெரிகிறது.

அஜீத்தின் அம்மாவாக சுமித்ரா. பெரிய பையன் பொறுப்பாய் கவனித்துக் கொள்கிறான் என்றாலும் சின்னப் பையன் ஒரு நல்ல வேலையில் சேர வேண்டுமே என்று பரிதவிக்கும் தாய். மகனைக் காணாத துக்கத்தில் துவண்டுபோய் சென்டிமெண்ட் காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் சுமித்ரா.

பிளாஷ்பேக் கதையில் இவரது இள வயது கதாபாத்திரத்திற்கு இவருடைய மகள் உமாவையே பயன்படுத்தியிருப்பது சிறப்பு.

அஜீத்தின் அண்ணனாக நடித்திருக்கும் அச்யுத் குமார் ஒரு பக்கா குடிகாரராக கண்ணுக்குத் தெரிகிறார். ஒவ்வொரு முறையும் தனது குடிகார நண்பனை அழைத்துக் கொண்டு தம்பியிடம் வந்து அறிமுகப்படு்த்தும் காட்சி கலகலப்பு..

இவருடைய மனைவி பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா’ ஸ்டைலில் “எனக்கு உள் பாவாடை வாங்கணும்ன்னா நான் யார்கிட்டடா காசு கேட்பேன்..?” என்று கேட்கும் ஆவேசக் கேள்வியை பட்டித் தொட்டியெங்கும் பரப்புரை செய்ய வேண்டும். வெல்டன் வினோத்.

வில்லன் கார்த்திகேயன் மிகச் சிறப்பான முறையில் தமிழுக்கு அறிமுகமாகியிருக்கிறார். ஆஜானுபாகுவான தோற்றத்தில், வில்லத்தனத்தை தனது உடல் மொழியால்கூட உணர்த்தியிருக்கிறார். படித்த, வேலையில்லாத இளைஞர்களை மூளைச் சலவை செய்து அவர்களைத் தவறான பாதைக்குத் திருப்பி விடும் வித்தையை அழகாக நடித்துக் காண்பித்திருக்கிறார் கார்த்திகேயா. இறுதியில் சண்டைக் காட்சியில்கூட அஜீத்திற்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார்.

அஜீத்தின் தம்பியாக வரும் ராஜ் அய்யப்பாவுக்கு பரிதாபமான ஒரு வேடம். தான் படித்த வேலைக்குத்தான் போக வேண்டும் என்று தவம் கிடப்பவர். யதார்த்த நிலைமையை புரிந்து கொள்ளாமல் கெட்ட வழியைத் தேர்வு செய்து தனது வாழ்க்கையை வீணடிக்கும் அந்தக் கதாபாத்திரத்தை மிகச் சரியாகவே செய்திருக்கிறார்.

தவறான வழிக்குள் அவர் போகும்போது அவர் பேசும் வசனங்கள் இன்றைய இளைய சமுதாயத்தினர் சந்திக்கும் பிரச்சினைகளை அப்படியே நம் கண் முன்னை நிறுத்துகிறது.

இணை கமிஷனர் சத்யா சுந்தர் மற்றும் தினேஷ் பிரபாகர் இருவரும் வில்லன்கள்தான் என்பது துவக்கத்திலேயே நமக்குத் தெரிந்துவிடுகிறது. ஆனால் இவர்களின் அதீத ஆர்வத்தைப் பார்த்து கடைசியாகத்தான் அஜீத்தே இவர்கள்தான் கருப்பு ஆடுகள் என்று தெரிந்து கொள்கிறாராம். திரைக்கதை இங்கேதான் இடிக்கிறது.

ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் சண்டை காட்சிகளும், பைக் ரேஸ் காட்சிகளும், சேஸிங் காட்சிகளும் அற்புதமாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. இந்தக் காட்சிகளை வடிவமைத்த சண்டை இயக்குநர் திலீப் சுப்பராயன் பெரும் பாராட்டுக்குரியவர். ஆனால் பல காட்சிகள் இருட்டின் பின்னணியில் படமாக்கப்பட்டிருந்தது ஏன் என்றுதான் தெரியவில்லை.

யுவன் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டடித்து விட்டன. நாங்க வேற மாரி’ பாடலின் இசையும், நடனமும் நன்றாக இருக்கிறது. இடைவேளைக்கு பின்பு வரும் அம்மா சென்டிமெண்ட் பாடலும் ஓகேதான். பின்னணி இசையும் காட்சிகளின் வலிமையைக் கூட்டுவதைப் போலவே அமைந்திருக்கிறது.

பைக்குகளை வைத்து நடக்கும் குற்றங்களாக செயினை அறுப்பது போன்ற காட்சிகளை மிகவும் பரபரப்பாக படமாக்கி படத்தின் துவக்கத்திலேயே நம்மை நிமிர்ந்து உட்கார வைத்துவிட்டார் இயக்குநர். முதல் பாதி முடியும்வரையிலும் அதே கோணத்திலேயே நம்மை பரபரக்க வைத்திருக்கிறார் இயக்குநர். இதற்கு அவருக்கு உறுதுணையாய் இருந்திருப்பது சண்டை இயக்குநர்தான்.  

அஜீத் சென்னையில் கால் வைத்த பிறகு படம் மேலும் சூடு பிடிக்கிறது. குற்றவாளிகளைப் பிடிக்க அஜீத் போடும் திட்டமும், அதற்கான காட்சியமைப்புகளும் ஒரு நிமிடம்கூட படத்தின் மையக் கருவைவிட்டு வெளியில் போகவில்லை. மேலும் ஒரு பைக் ரேஸ் காட்சியில் இருக்கும் 2 டிவிஸ்ட்டுகளும் திரையைவிட்டு நம் கண்களை அகலவிடவில்லை.

இடைவேளைக்கு முன்பு வரும் டிவிஸ்ட்டும் அதன் பிறகு ஏற்படும் திடீர் திருப்பங்களும்தான் படத்தின் போக்கை மாற்றுகின்றன. இடைவேளைக்குப் பிறகும் சண்டைக் காட்சிகளும் துரத்தல் காட்சிகளும் வந்தாலும், படத்தின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்பது நமக்குத் தெரிந்துவிட்டது என்பதால் தன் விறுவிறுப்பை இழந்துவிட்டது.

கிளைமாக்ஸ் காட்சியில் அஜீத்தின் குடும்பத்தினரைத் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு கொலை செய்யப் போவதாக வில்லன் மிரட்டுவதெல்லாம் ரொம்பவும் பழைய திரைக்கதை. அஜீத்தும் சரியான நேரத்தில் வந்து அவர்களைக் காப்பாற்றுவதெல்லாம் 1980-களில் வந்த படங்களில் இருந்த கதை. இப்போதும் இப்படியேவா எடுப்பது..?

படத்தில் வில்லன் கார்த்திகேயனின் ‘சாத்தானின் அடிமைகள்’ குழுமத்தை ஒரு வித்தியாசமானதாகவும், புதுமையாகவும் செயல்படுவதைப் போல் காட்டியிருக்கிறார் இயக்குநர். ஆனால் இதே பாணியில் காவல்துறையும் செயல்படுவதாகக் காட்டியிருக்க வேண்டும். அது அப்படியே வழக்கம்போல இருந்ததுதான் கொஞ்சம் நெருடல்.

காவல் துறைக்குள் நடக்கும் ஈகோ மோதல்.. போட்டுக் கொடுக்கும்விதம், பழி வாங்குதல் என்று சில விஷயங்களையும் இயக்குநர் முன் வைத்திருக்கிறார். ஆனால் இவைகள் ஏதோ போகிறபோக்கில் செய்வதுபோல மிக அலட்சியமாகக் காட்டப்பட்டிருக்கிறது.

இந்தப் படத்தின் ஸ்பெஷலாட்டியே படத்தில் அதிக நேரம் வரும் பைக் ரேஸ் காட்சிகளும், போலீஸ் வேன் துரத்தல்களும், சண்டைக் காட்சிகளும்தான். இது மூன்றையும் இணைப்பதற்கு ஏற்றவகையில் கதையைத் தயார் செய்து திரைக்கதை எழுதியிருக்கிறார் இயக்குநர் என்று புரிகிறது.

இந்தப் படம் அஜீத்தின் ரசிகர்களுக்கு நிச்சயமாகப் பிடிக்கும். அவர்களுக்குக் கொண்டாட்டமாகத்தான் இருக்கும். மசாலா பட பிரியர்களுக்கும் பிடித்தமானதுதான். பைக் ரேஸ், சேஸிங் காட்சிகள், சண்டை காட்சிகளுக்காகவே இந்தப் படம் வரும் காலங்களில் நிச்சயமாகப் பேசப்படும்.

RATING : 3.5 / 5

- Advertisement -

Read more

Local News