‘இந்தியன்-2′ படத்தை இயக்காமல் வேறு படத்தை இயக்கக் கூடாது என்று இயக்குநர் ஷங்கருக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவி்த்ததையடுத்து இயக்குநர் ஷங்கர் தனது அடுத்தப் பட வேலைகளில் தீவீரமாக இறங்கிவிட்டாராம்.
‘இந்தியன்-2′ பட பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வதற்காக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பானுமதியை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் ஷங்கர் கலந்து கொண்டாலும் படத்தை உடனடியாக முடித்துக் கொடுக்க முடியாது. அக்டோபரில் துவக்கி அடுத்தாண்டு பிப்ரவரியில்தான் முடித்துத் தர முடியும் என்பதில் தெளிவாக இருக்கிறாராம். ஆனால் லைகா நிறுவனம் இதற்கு ஒத்துக் கொள்ளாமல் இப்போது துவக்கி செப்டம்பர் கடைசிக்குள்ளாக முடித்துக் கொடுக்கத்தான் சொல்லும். நிச்சயம் இதுவும் தோல்வியடையும் என்றுதான் சொல்கிறார்கள்.
அதற்காக சும்மா இருக்க முடியாது என்பதால் ஷங்கர் தான் அடுத்து இயக்கவிருக்கும் ராம் சரண் பட வேலைகளைத் துவக்கிவிட்டார். இதற்காக கோர்ட் தீர்ப்பு வந்த அடுத்த நாளை ஹைதராபாத் பறந்த ஷங்கர் அங்கே நாயகன் ராம் சரணையும், தயாரிப்பாளர் தில் ராஜூவையும் சந்தித்து பட வேலைகள் சம்பந்தமாக பேசியுள்ளாராம்.
மத்தியஸ்தம் தோல்வியில் முடிந்தால் அதே செப்டம்பரில் ராம் சரண் படத்தை ஷங்கர் துவக்கிவிடுவார். பின்பு இந்தப் படத்தை முடித்துவிட்டு வந்து அடுத்தாண்டுதான் ‘இந்தியன்-2’-வைத் துவக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் கமல்ஹாசனும் தனது ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பையும், ‘திரிஷ்யம்-2’ படத்தையும் இந்தாண்டுக்குள்ளாக முடித்துவிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
லைகா நிறுவனம்தான் பாவம்.. என்ன செய்யப் போகிறார்களோ…?