Thursday, November 21, 2024

“துப்பறிவாளன்-2′ படத்தின் கடனுக்கே விஷால் இன்னும் வட்டி கட்டவில்லை”-தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி புகார்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சில நாட்களுக்கு முன்பாக நடிகர் விஷால் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஆர்.பி.செளத்ரி மீது திடுக்கிடும் புகார் ஒன்றை காவல் துறையில் அளித்திருந்தார்.

‘இரும்புத் திரை’ படத்தின் தயாரிப்புக்காக ஆர்.பி.செளத்ரியிடம் தான் வாங்கிய கடனை அடைத்த பிறகும், உறுதி மொழிப் பத்திரங்களை ஆர்.பி.செளத்ரி திருப்பித் தரவில்லை என்று அந்தப் புகாரில் நடிகர் விஷால் கூறியிருந்தார்.

விஷாலின் இந்தப் புகார் எழும்பிய நேரத்தில் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி கொடைக்கானலில் ஓய்வில் இருந்ததால் “நான் சென்னை வந்த பின்பு இதற்காக விரிவாக பதில் சொல்கிறேன்” என்று சொல்லியிருந்தார்.

அதன்படி இன்றைக்கு விஷாலுடனான கடன் கொடுக்கல், வாங்கலின்போது  என்ன நடந்தது என்பது குறித்து விளக்கமான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ :

“மூன்று வருடங்களுக்கு முன்பு நடிகர்‌ விஷால்‌ இரும்புத் திரை’ படத்தினைத்‌ தயாரிக்க என்னிடம்‌ பைனான்ஸ்‌ வாங்கியிருந்தார்‌. அந்தப் படத்திற்கு நானும்‌ விநியோகஸ்தர்‌ திருப்பூர்‌ சுப்பிரமணியும்‌ சேர்ந்து பணம்‌ கொடுத்தோம்‌.

இரும்புத் திரை’ படத்தின்‌ வெளியீட்டின்போது‌ விஷால்‌ எனக்குக் கொடுக்க வேண்டிய பணத்தில்,‌ பாதி தொகையை கொடுத்துவிட்டு மீதித் தொகையை சில தவணைகளில்‌ கொடுப்பதாக கூறினார்.

நானும்‌ ஒரு தயாரிப்பாளர்‌ என்ற முறையில்‌ படம்‌ வெளியாக வேண்டுமென்று ஒப்புக் கொண்டு கிளியரன்ஸ் கொடுத்தேன்‌. இறுதியாக இருந்த பாக்கி தொகையை அவர்‌ தயாரித்து நடிக்கும்‌ சக்ரா’ திரைப்படத்தின்‌ வெளியீட்டில்‌ தருவதாக கூறியிருந்தார்‌.

‘சக்ரா’ படத்தின்‌ வெளியீட்டின்‌பொழுது எனக்குத் தர வேண்டிய பணத்தை திருப்பூர்‌ சுப்பிரமணியம்‌ சக்ரா’ படத்தின்‌ கோவை ஏரியா விநியோக உரிமையை பெற்றுள்ளதாகவும்‌ அதில்‌ வரும்‌ ஓவர் ப்ளோ பணத்தின்‌ மூலம்‌ எனக்கு வர வேண்டிய தொகையை கொடுத்துவிடுவதாக கூறினார்‌. நானும்‌ அதற்கு ஒப்புக் கொண்டேன்‌.

அதன்‌ அடிப்படையில்‌ நானும்‌ விஷாலும்‌ 20-02 -2021 அன்று விஷாலின்‌ வழக்கறிஞர்‌ மூலமாக இரும்புத் திரை’, ‘சக்ரா’ ஆகிய இரு திரைப்படங்களுக்கும் மட்டுமான வரவு செலவு கணக்கு முடிந்து விட்டதாக ஓர்‌ ஒப்பந்தம்‌ செய்து கொண்டோம்‌.

இரும்புத் திரை’ பைனான்ஸ்க்காக அந்தப் படத்தின் நெகட்டிவ்வை எனது நிறுவனத்தின்‌ பெயரிலும்‌ மேலும்,‌ சில உறுதிமொழி பத்திரங்களையும்‌ கொடுத்திருந்தார் விஷால்‌.

உறுதி மொழி பத்திரங்கள் எனது நிறுவனத்தின்‌ பெயரில்‌ இருந்த காரணத்தால்‌, திருப்பூர்‌ சுப்பிரமணியம்‌ பணத்திற்காக விஷால்‌ கொடுத்த பத்திரங்களை எங்கள்‌ இருவருக்கும்‌ பொதுவான ரெட்டை ஜடை வயசு’, ‘ஆயுத பூஜை’ படத்தின்‌ இயக்குநரான‌ சிவக்குமாரிடம்‌ கொடுத்து வைத்திருந்தேன்‌.

இந்த நிலையில்‌ திடிரென சிவக்குமார்‌  மாரடைப்பால்‌ மரணம்‌ அடைந்துவிட்டார்‌. அவர்‌ திருமணமாகாதவர்‌ என்பதால்‌ தனி நபராக ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில்‌ வாழ்ந்து வந்தார்‌. ஆகவே அவர்‌ இறந்தது, இரண்டு நாட்களுக்கு பின்புதான்‌ மற்றவர்களுக்கே தெரிய வந்தது.

அதன் பின்‌ அந்தப் பத்திரங்களை சிவக்குமார் எங்கு வைத்திருக்கிறார்‌ என்று யாருக்குமே தெரியாமல் போனது. எப்படியும்‌ கிடைத்துவிடும்‌ என்ற நம்பிக்கையில்‌ அவருக்கு தெரிந்த நபர்களிடம்‌ விசாரித்தும்‌ இன்றுவரை கிடைக்கவில்லை.

அதன் பின்னர்‌ கொரோனா காலம்‌ தொடங்கிவிட்டது, இந்நேரத்தில்‌ எனக்கும்‌ விஷாலுக்கும்‌ இடையில்‌ பணம்‌ வாங்கி, கொடுக்கும்‌ லக்ஷ்மன்‌ என்பவர்‌ மூலம்‌ அந்த பத்திரம்‌ கிடைக்காமல்‌ போன விஷயத்தை விஷாலிடம் தெரிவிக்குமாறு கூறினேன்‌.

இந்த நிலையில்‌ விஷால்‌ கடந்த 07-05-2021-ல்‌ காவல் துறையில்‌ என்னிடம்‌ கொடுத்த உறுதிமொழி பத்திரங்கள்‌ திரும்ப கிடைக்கவில்லை. என்றும்‌, அதை வேறு யாரிடமும்‌ இருக்கிறதா என்பதை கண்டு பிடித்துத் தாருங்கள்‌ என்றும்‌ புகார்‌ ஒன்றை கொடுத்துள்ளார்‌.

அவர்‌ கொடுத்த புகார்‌ மிகவும்‌ சரியானதென்றே நானும்‌ கருதுகிறேன்., ஏனெனில்‌, அந்தப் பத்திரங்கள் வேறு யாருடைய கைகளிலாவது சிக்கியிருக்குமோ என்ற பயத்தில்‌ அந்தப் புகாரை விஷால் கொடுத்துள்ளார்‌.

ஆனால்,‌ இது குறித்து அவர்‌ என்னிடமும்‌ கலந்து பேசி நாங்கள்‌ இருவரும்‌ சேர்ந்து புகார்‌ அளித்திருந்தால்‌ தெளிவாக இருந்திருக்கும்‌.

ஏனெனில்‌ 2020 ஜனவரியில்‌ அவர்‌ தயாரித்து இயக்கும்‌ துப்பறிவாளன்‌-2’ திரைப்படத்தின்‌ சாட்டிலைட் டிஜிட்டல் உரிமையின்‌ மீது என்னிடம்‌ பைனான்ஸ்‌ வாங்கியுள்ளார்‌. இந்த பைனான்ஸ்‌ வாங்கிய தேதியில்‌ இருந்து இன்றுவரை வட்டியும்‌, அசலும்‌ நிலுவையில்‌ உள்ளன.

இந்த நிலையில்‌ இரும்புத் திரை’ படத்தின்‌ உறுதிமொழி பத்திரங்களை வைத்து நான்‌ மோசடி செய்ய முயற்சிப்பதாக விஷால்‌ புகார்‌ செய்துள்ளார்‌ என்ற செய்திகள்‌ ஊடகங்களில்‌ மூலம்‌ வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த செய்திகள்‌ எனக்கு மிகுந்த மன வேதனை அளிக்கின்றன. 4 மொழிகளில்‌, 92 திரைப்படங்கள்‌, 40 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில்‌ இப்படி ஒரு அவதூறு‌ புகாரை நான்‌ சந்திப்பது இதுவே முதல்‌ முறையாகும்‌.

இப்போதும் என்னுடைய பணம்‌ பிறரிடம்‌ இருந்து பாக்கியாக வர வேண்டியதே தவிர, மற்ற எவருடைய பணமும்‌ என்னிடம்‌ இல்லை என்பது தென்னிந்திய திரை உலகத்திற்கே தெரியும்.

என்னுடைய இந்த அறிக்கையின்‌ தாமதத்திற்கு காரணம்‌ இந்தச் சம்பவம்‌ நடக்கும்‌ சமயத்தில்‌ நான்‌ வெளியூரில்‌ இருந்த காரணத்தினால்தான்..‌ சென்னைக்கு திரும்பிய பிறகு என்னுடைய தன்னிலை விளக்கத்தை தங்களுடன்‌ பகிர்ந்து கொள்கிறேன்‌.

மேலும் ஒரு அறிவிப்பு : சிவகுமார் அவர்களிடம் இருந்த உறுதிமொழி பாத்திரங்கள் அவரைச் சார்ந்த நபர்கள் இடமோ அல்லது வேறு யாரிடமும் இருந்தால் அதை என்னிடமோ, விஷாலிடமோ அல்லது காவல்துறையிடமோ ஒப்படைக்கவும்.

மீறி அதை வைத்து இருப்பவர்களோ அல்லது பயன்படுத்த முயற்சி செய்வதோ தெரிய வந்தால் அவர்கள் மீது மிக கடுமையான கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை ஊடகங்கள் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்…”

இவ்வாறு தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News