Touring Talkies
100% Cinema

Sunday, May 18, 2025

Touring Talkies

‘சென்னை டு பாண்டிச்சேரி’ பயணத்தில் நடக்கும் கதைதான் ‘டேக் டைவர்ஷன்’ திரைப்படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் கார் பயணத்தில் நடக்கிற கதையாக உருவாகி இருக்கிறது ‘டேக் டைவர்ஷன்’ திரைப்படம்.

இப்படத்தை சிவானி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுபா செந்தில், நண்பர்களுடன் இணைந்து தயாரித்திருக்கிறார்.

இப்படத்தில் ‘கேஜி எப்’ படத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றியவரும், கூத்துப் பட்டறையில் பத்தாண்டுகள்  நடிப்புப் பயிற்சி பெற்றவருமான சிவகுமார் அறிமுக நாயகனாக நடித்து முத்திரை பதித்துள்ளார்.

‘பேட்ட’,  ‘சதுரங்கவேட்டை’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்த ராமச்சந்திரன் இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில்  இளமை துள்ளலுடன் நடித்துள்ளார்.

பாடினி குமார் நாயகியாக நடித்துள்ளார். இவரது நடிப்பு அனுபவசாலியைப் போல அற்புதமாக அமைந்துள்ளது.

இரண்டாம் கதாநாயகியாக காயத்ரி நடித்துள்ளார். ஜான் விஜய் வில்லனாக வருகிறார். படத்தில் 20 நிமிடங்கள் அவரது கலக்கல் நடிப்பு அனைவராலும் ரசிக்கப்படும்.

மேலும் விஜய் டிவி’ புகழ் ஜார்ஜ் விஜய்,  பாலாஜி சந்திரன், சீனிவாசன், அருணாச்சலம் ஆகியோரும்  நடித்துள்ளனர். 

இப்படத்துக்கு ஒளிப்பதிவு ஈஸ்வரன் தங்கவேல். இவர் ஏற்கெனவே நான்கு படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். கன்னடத்தில் இவர் ஒளிப்பதிவு செய்த ஒரு படத்திற்குத் தேசிய விருது கிடைத்திருக்கிறது.

படத்திற்கு இசை ஜோஸ் பிராங்க்ளின். இவர் ‘நெடுநல்வாடை’, ‘என் பெயர் ஆனந்தன்’ படங்களின் மூலம் நல்லதொரு அறிமுகம் பெற்றிருப்பவர். படத் தொகுப்பு – விது ஜீவா. எழுதி, இயக்கியிருக்கிறார் இயக்குநர் சிவானி செந்தில்.

இயக்குநர்  சிவானி செந்தில் ஏற்கெனவே ‘கார்கில்’ என்ற படத்தை 2018-ம் ஆண்டில் இயக்கிய அனுபவம் கொண்டவர்.  

‘திருமலை தென்குமரி’ முதல் ‘பையா’ படம் வரையிலும் பயண வழிக் கதைகளைக் கொண்ட பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன. அந்த வரிசையில் சேரும் அளவிற்கு நம்பிக்கையோடு டேக் டைவர்ஷன்’ படம் உருவாகியிருக்கிறது.

சென்னை ராயபுரத்தில் ஒரு வெப்பமான பின்புலத்தோடு காட்சிகள் தொடங்க, வழியில் பல்வேறுபட்ட நிலக் காட்சிகள் மாறி பாண்டிச்சேரி கடற்கரைவரை செல்லும் கதை இது. வழியில் பல வர்ண ஜாலங்களாகக் காட்சிகள் திரையில் விரிகிற கதையாக இப்படம் உருவாகியிருக்கிறது.

நாயகிக்கு மூன்று பேரால் நடக்கும் பிரச்சினைகள் வரும். அதற்கான தீர்வை நோக்கிச் செல்லும்படி இந்த கதையின் ஓட்டம் இருக்கும். மூன்றாண்டு காலம் அவளுக்கு இருந்த பிரச்சினைகள் அந்த ஒரு நாள் பயணத்தில் எப்படி தீர்கிறது என்பதுதான் கதையின் போக்கு.

படத்தின் தலைப்பைப் பற்றி இயக்குநர் கூறும்போது, “நாம் அனைவருமே புறப்பட்ட பாதையிலிருந்து நேராகச் சரியாக அடைய வேண்டிய இடத்திற்குப் போய்ச் சேருவதில்லை. காலம் நம்மை மாற்றுப் பாதையில் திசை திருப்பி வேறு ஒரு கிளை பிரித்து அங்கே பயணிக்க வைத்து இறுதியில்தான் அந்த இடத்தை அடைய வைக்கும்.

அப்படி வாழ்க்கையில் ‘டேக் டைவர்ஷன்’ என்ற வார்த்தைக்கான பொருளை அனைவரும் அனுபவப்பூர்வமாக உணர்ந்து இருப்பார்கள். அந்த வகையில்தான் இந்தப் பெயரை வைத்தேன். இதற்கான சரியான தமிழ்ப் பெயர் கிடைக்கவில்லை என்பதும் ஒரு காரணம். இது ஒரு கலர்ஃபுல்லான படமாக இருக்கும்.  இளமை ததும்பும் காட்சிகள் புதிதாக இருக்கும்.

இந்தக்  கொரோனா காலத்தில் அவ்வப்போது படப்பிடிப்பு என்று திட்டமிடாமல் துண்டு துண்டாக  படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருக்க முடியாது என்பதால்  ஒரே பயணத் திட்டத்தில் படத்தை முடிப்பது என்ற நோக்கில் ஆரம்பித்தோம். இதோ படம் இப்போது முடிவடையும் தருவாயில் இருக்கிறது. இந்தப் படத்தில் எத்தனை பேர் இருந்தாலும் சரி.. கதைதான் ஹீரோ…” என்றார் இயக்குநர். 

தற்போது படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.

- Advertisement -

Read more

Local News