லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வந்த ‘இந்தியன்-2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ‘ஈவிபி பிலிம் சிட்டி’யில் நடைபெற்றபோது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் மரணமடைந்ததையடுத்து இந்தப் படத்தின் ஷூட்டிங் அப்படியே மறு தேதி குறிப்பிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அதற்குப் பிறகு கமல்ஹாசன் அரசியலில் தீவிரமாகிவிட்டார். பிக்பாஸிலும் கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து தனது புதிய படமாக ‘விக்ரம்-2’ படத்தின் அறிவிப்பையும் வெளியிட்டார் கமல்ஹாசன்.
இன்னொரு பக்கம் இயக்குநர் ஷங்கர் தற்போது தெலுங்கில் தில் ராஜூ தயாரிப்பில் ஒரு படத்தை இயக்குவதற்காக ஒப்பந்தமாகிவிட்டார். அதோடு ஒரு ஹிந்திப் படத்தையும் இயக்கப் போகிறாராம்.
லைகா நிறுவனமும் இந்தியில் ஒரு படத்தை தயாரிக்கப் போவதாக அறிவித்துவிட்டது. இந்தப் பக்கம் கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இருக்கிறார். ஒரு வேளை தேர்தலில் நின்றால் அதற்கடுத்து அவரால் படங்களில் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை.
இந்த இக்கட்டான சூழலில் ‘இந்தியன்-2’ என்னதான் ஆகும் என்று யாருக்குமே தெரியவில்லை. இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.
இதில் காஜல் அகர்வாலுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தேறிவிட்டது. அவரும் வேறு சில படங்களில் தொடர்ச்சியாக நடித்தி வருகிறார்.
இந்த நிலையில் ‘இந்தியன்-2’ படத்தின் இந்தத் தாமதத்திற்கு என்ன காரணம் என்று நடிகை காஜல் அகர்வாலிடம் கேட்டபோது, “இந்தப் படத்தில் பணியாற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். அவர்கள் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்து படப்பிடிப்பில் கலந்து கொள்வது இந்தக் கொரோனா காலக்கட்டத்தில் சாத்தியமில்லாதது. பலவித நெருக்கடிகள்.. முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை இதில் பாலோ செய்ய வேண்டியுள்ளதால் அவர்களால் இந்தியாவுக்கு வர முடியவில்லை. இதனாலேயே அந்தப் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டேயிருக்கிறது..” என்றார்.
முதல் கட்ட கொரோனா போய் அடுத்தக் கட்ட கொரோனாவே வந்துவிட்டது. இப்பவும் ‘இந்தியன்-2’-வுக்கு விமோசனம் இல்லையேல் எப்போதுதான் கிடைக்குமாம்..?