கவிதாலயா நிறுவனம் தயாரித்த ‘அண்ணாமலை’ படத்தில் நடிகர் ராதாரவியும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அந்தப் படத்தில் ராதாரவி அடிக்கடி பேசும் ஒரு பன்ச் வசனம் “கூட்டிக் கழிச்சுப் பாரு. கணக்குத் தானா வரும்…” என்பதுதான்.
இந்த வசனத்தை தனக்கே உரித்தான குரலில், மாடுலேஷனில்.. பாடி லாங்குவேஜில் ராதாரவி சொல்லும்போது அவரது வில்லத்தனத்திற்கு பூஸ்ட் கொடுத்தது. ரசிகர்களும் அதைப் பெரிய அளவில் வரவேற்றார்கள்.
இதே பன்ச் வசனத்தை ரஜினி அந்தப் படத்தின் ஒரு காட்சியில் பயன்படுத்தியிருப்பார். இந்தக் காட்சிக்கும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்தக் காட்சியைப் படமாக்கியவிதம் பற்றி நடிகர் ராதாரவி பேசும்போது, “நான் ‘அண்ணாமலை’ படத்தில் பேசிய அந்த பன்ச் வசனம் அந்தப் படத்தின் பெயரைவிடவும் மிகவும் பிரபலமானது. பொதுவா ரஜினி ஸார் படங்களில் அவர் பேசும் டயலாக்குகள் மட்டுமே பேமஸாகும். ஆனால், முதன்முறையா ‘அண்ணாமலை’ படத்துல மட்டும்தான் நான் பேசுன இந்த டயலாக் மட்டும் பேமஸாச்சு.
இந்தப் படத்துல ஏலம் எடுக்கிற சீன் ஒண்ணு இருக்கு. அதுல ரஜினி ஏலத்தை மேல ஏத்திவிட்டுட்டு எங்க தலைல கட்டிருவாரு. அந்தக் காட்சி முடிஞ்சவுடனேயே நான் ரஜினி ஸார்கிட்ட போய்.. “ஸார்.. நான் இதுவரைக்கும் சொன்ன கூட்டிக் கழிச்சுப் பாரு கணக்குத் தானா வரும் என்ற டயலாக்கை இப்போ நீங்க வேற மாடுலஷேன்ல சொன்னீங்கன்னா அது மக்கள்கிட்ட நல்லா ரீச்சாகும்”ன்னு சொன்னேன்.
அவர் ஷூட்டிங்கையெல்லாம் நிறுத்திட்டு யோசிச்சார். “எம்.ஜி.ஆர். பார்முலா ஸார் இது.. எம்.ஜி.ஆர். தன்னோட படத்துல ஏதாவது ஒரு சீன்லயாவது வில்லன் நம்பியார் மாதிரி நடிச்சுக் காட்டுவாரு. அது பயங்கர சக்ஸஸாகும்”ன்னு சொன்னேன். ரஜினி ஸார் டக்குன்னு புரிஞ்சுக்கிட்டார்.
அப்புறமாத்தான் கார்ல கிளம்பும்போது கார் பக்கத்துல நின்னுக்கிட்டு ரஜினி ஸார் ஒரு நீட்டமா வசனம் பேசுவாரு. “நான் போட்டது மனக்கணக்கு”ன்னு தொடங்கி கடைசீல “கூட்டிக் கழிச்சுப் பாரு.. கணக்குத் தானா வரும். எட்றா வண்டியை” என்று சொல்லுவார்.. தியேட்டர்ல அப்ளாஸ் அள்ளிருச்சு..” என்று சொல்லியிருக்கிறார் நடிகர் ராதாரவி.