Friday, November 22, 2024

ஸ்ரீதரின் கடைசி படமான ‘தந்து விட்டேன் என்னை’ படத்திற்கு வந்த சோதனை..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பழம் பெரும் இயக்குநரான ஸ்ரீதர் 1991-ம் ஆண்டில் ‘தந்து விட்டேன் என்னை’ என்ற படத்தை தயாரித்து, இயக்கியிருந்தார்.

இந்தப் படத்தில் விக்ரம் நடித்திருந்தார். இது விக்ரம் நடித்த இரண்டாவது திரைப்படம். ஆனால் முதலில் நடிக்கத் துவங்கிய திரைப்படமும்கூட. விக்ரமுக்கு ஜோடியாக ரோகிணி நடித்திருந்தார். மேலும், மனோரமாவும், பாரதிராஜாவும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார்.

இருந்தும், படம் முழுவதும் உருவாகி, வெளியீட்டுக்குத் தயாராகி இருந்த நிலையில் படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் யாரும் விரும்பவில்லை. படத்தைப் பார்த்த விநியோகஸ்தர்கள் படம் தேறாது என்றே சொல்லிவிட்டார்கள்.

இதையடுத்து கடும் மன உளைச்சலுக்கு ஆளான இயக்குநர் ஸ்ரீதர் அவ்வப்போது தனது சீடரான இயக்குநர் எம்.பாஸ்கரின் அலுவலகத்திற்கு வந்து செல்வார். அப்படி ஒரு நாள் வந்தபோது அங்கேயிருந்த கதாசிரியர் கலைஞானிடத்தில் இதைச் சொல்லியிருக்கிறார்.

இதன் பின் நடந்ததை கலைஞானமே இப்போது சொல்லியிருக்கிறார்.

“ஸ்ரீதர் ஸார் தன்னுடைய ‘தந்துவிட்டேன் என்னை’ படம் வியாபாரம் ஆகாமல் இருப்பதைப் பற்றி என்னிடத்தில் சொல்லி வருத்தப்பட்டார். “என்ன செய்யலாம் கலைஞானம்…?” என்று கேட்டார். “நான் முதல்ல படத்தைப் பார்க்குறேன் ஸார். அப்புறமா ஏதாவது செய்ய முடியுமான்னு சொல்றேன்…” என்றேன்.

உடனேயே என் ஒருவனுக்காக ‘மேனா’ தியேட்டரில் ‘தந்துவிட்டேன் என்னை’ படத்தைப் போட்டுக் காட்டினார் ஸ்ரீதர் ஸார். படம் முழுவதையும் பார்த்த பின்பு, “இந்தக் கதை எப்படி ஸார் ஓடும்.. இது உங்களுடைய டைப் கதையே இல்லையே ஸார்.. ஸ்ரீதருக்கு என்றே தனியான ஒரு கதைக் களம் இருக்கே.. அதோடு ஹீரோ சாய்ஸ் தப்பா இருக்கு ஸார்..” என்று படபடவென என் மனதில் பட்டதை அப்படியே சொல்லிவிட்டேன்.

ஸ்ரீதர் ஸார்.. இதைக் கேட்டுவிட்டு, “யெஸ்.. உண்மைதான் கலைஞானம். எனக்கும் பர்ஸ்ட் காப்பி பார்க்கும்போதுதான் இது என் படம் மாதிரியில்லையேன்னு தோணுச்சு.. நீங்க கரெக்ட்டா சொல்லிட்டீங்க. இப்போ என்ன செய்றது..?” என்று கேட்டார் ஸ்ரீதர் ஸார்.

“வந்த விலைக்கு வித்திருங்க ஸார். நஷ்டம் வந்தாலும் பார்த்துக்கலாம்.. அடுத்தப் படங்கள்ல சம்பாதிச்சுக்கலாம் ஸார்…” என்றேன். “ஓகே…” என்றார் ஸ்ரீதர்.

சொன்னது போலவே பாதி விலைக்கு.. நஷ்டத்தை ஏற்றுக் கொண்டு அந்தப் படத்தை திரைக்குக் கொண்டு வந்தார். ஆனால், நாங்கள் எதிர்பார்க்காத படுதோல்வியை அந்தப் படம் சம்பாதித்தது.

படத்தின் முதல் காட்சியிலேயே படத்தை சில தியேட்டர்களில் தூக்கிவிட்டார்கள். சில தியேட்டர்களில் சில நாட்கள் மட்டுமே ஓட்டியிருக்கிறார்கள்.

இப்படி படத்தை ஓட்டிய தியேட்டர்களில் இருந்து ஸ்ரீதர் ஸாருக்கு போன் வந்திருக்கிறது. “வந்து பொட்டியை எடுத்திட்டுப் போங்க ஸார். இடத்தை அடைச்சுக்கிட்டுக் கிடக்கு…” என்று சொல்லியிருக்கிறார்கள்.

இதைக் கேட்டு மிகுந்த மன வேதனைப்பட்ட ஸ்ரீதர் தனது சீடர் எம்.பாஸ்கரிடம் வந்து இதைப் பற்றிச் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார். பாஸ்கரோ, “நீங்க பதிலே சொல்லாதீங்க ஸார். போயும் எடுக்காதீங்க. அப்படியே விட்ருங்க. போகட்டும்..” என்று ஐடியா சொல்லியிருக்கிறார். இதனால் ஸ்ரீதர் அந்தப் பெட்டிகளைத் திரும்பப் பெற்றுக் கொள்ளவில்லை.

இப்படியாக 1954-ம் ஆண்டில் ‘ரத்தப் பாசம்’ படம் மூலமாக தமிழ்த் திரையுலகத்தில் காலடியெடுத்து வைத்து கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் ஒரு புதிய புரட்சியையே உருவாக்கி, பல புதிய இயக்குநர்களை தனது வாரிசுகளாக தமிழ்த் திரையுலகத்திற்கு தந்த பெருமை மிக்க இயக்குநரான ஸ்ரீதர், தன்னுடைய இந்தக் கடைசிப் படத்தின் மூலம் மிகுந்த மன வருத்தத்துடன் தமிழ்த் திரையுலகத்தைவிட்டு விலகினார்..” என்று சொல்லியிருக்கிறார் கதாசிரியர் கலைஞானம்.

- Advertisement -

Read more

Local News