சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முதல் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் ஹைலைட்டாக “சங்கத் தேர்தலில் பணம் விளையாடியிருக்கிறது. மோசடியாக ஆட்களை வைத்து வாக்களிக்க வைத்திருக்கிறார்கள்…” என்றெல்லாம் புகார் கூறிய டி.ராஜேந்தர் அணியினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்…
தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அளித்திருக்கும் புகாரின் கீழ் நடிகர் சிம்புவை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காணப்படும் என்றும் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள்.
மேலும்,
வி.பி.எஃப். கட்டணத்தை எங்களது சங்க உறுப்பினர்கள் இனிமேல் கட்டவே மாட்டார்கள்.
நாளைக்குள் இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை கியூப் நிறுவனம் சொல்லாவிட்டால் கியூப் நிறுவனத்தின் முன்பாக தயாரிப்பாளர்கள் சங்கம் போராட்டம் நடத்தும்.
ஆன்லைன் டிக்கெட் வசதியுள்ள தியேட்டர்களில் மட்டுமே நாங்கள் படத்தை வெளியிடுவோம்.
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான கட்டணம் பாதிக்குப் பாதியாக 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்படுகிறது.
பையனூரில் தயாரிப்பாளர்களுக்கென்று குடியிருப்புகள் கட்டித் தர வழிவகை செய்யப்படும்.
வேறு சங்கங்களில் பொறுப்பில் இருப்பவர்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிர்வாகப் பொறுப்புக்கு வரக் கூடாது என்று சங்க விதிகளில் திருத்தம் செய்யப்படும்.
என்பது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.