Friday, November 22, 2024

டி.ராஜேந்தர் தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயமானது..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இருக்கின்ற சங்கங்களே போதாதா என்னும் நிலையில் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கென்று புதிய சங்கமும் உருவாகியுள்ளது.

இந்தச் சங்கத்தை இயக்குநர் டி.ராஜேந்தரே துவக்கியிருக்கிறார். சமீபத்தி்ல் நடந்து முடிந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தோல்வியடைந்திருந்த டி.ராஜேந்தர் அந்தத் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தனக்கென்று ஒரு சங்கத்தைத் திட்டமிட்டு துவக்கியிருக்கிறார் என்கிறார்கள்.

அதுவும்.. இன்றைக்கு காலையில்தான் தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் முன்னிலையில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட அனைத்து பிரதிநிதிகளும் பதவியேற்றுக் கொண்டனர்.

அந்த வைபவம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் அனைவரின் செல்போனுக்கும் அதிர்ச்சியளிக்கும்விதமாக இந்தச் செய்தியை அனுப்பியிருக்கிறது டி.ராஜேந்தரின் அணி.

இந்தப் புதிய சங்கத்திற்கு ‘தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்கம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

இ்ந்தப் புதிய சங்கம் சென்னை தெற்கு பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சங்கம் நேற்று டிசம்பர் 1-ம் தேதியன்று பதிவு செய்யப்பட்டிருப்பதாக சங்கப் பதிவாளர் ஒப்புதல் கடிதம் அளித்திருக்கிறார்.

இந்தச் சங்கத்திற்கு டி.ராஜேந்தரே தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், சுபாஷ் சந்திரபோஸ் இருவரும் செயலாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கே.ராஜன் பொருளாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

டி.ராஜேந்தர் அணியில் சார்பாக சமீபத்திய தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த அனைத்து தயாரிப்பாளர்களும் செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனராம்.

நடந்து முடிந்த தேர்தலில் முரளி ராமசாமி அணியினர் மிகப் பெரிய அளவுக்கு மோசடி செய்துள்ளதாகவும், வாக்காளர்களுக்கு பணம், தங்கக் காசு, டிவிக்கள் என்று அன்பளிப்புகளை அள்ளி வழங்கியதாலேயே அவர்கள் வெற்றி பெற்றுவிட்டதாக டி.ராஜேந்தர் புகார் தெரிவித்திருந்தார்.

ஆனால் தேர்தலை நடத்திய நீதிபதி அதனை ஏற்க மறுத்து “தேர்தல் செல்லும்” என்று அறிவித்துவிட்டபடியால் “மேலும், அங்கேயிருந்து நாங்கள் அவமானப்பட விருப்பமில்லை…” என்று சொல்லி டி.ராஜேந்தர் வெளியேறியிருக்கிறார்.

தற்போது தமிழ்த் திரைப்படத் துறையில் தயாரிப்பாளர்களுக்கென்று இந்தப் புதிய சங்கத்தையும் சேர்த்து 5 சங்கங்கள் இருக்கின்றன.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், ‘கில்டு’ எனப்படும் தென்னிந்திய திரைப்படம்-டிவி தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்கம் என்று 5 சங்கங்களாக தயாரிப்பாளர்கள் பிரிந்திருக்கின்றனர்.

ஒன்றாகக் குரல் கொடுத்தாலும் தயாரிப்பாளர்களின் கோரிக்கைகள் தமிழ்த் திரையுலகத்துக்குள்ளேயே நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இப்படி 5 சங்கங்களாக பிரிந்து சென்று யாருக்காக இவர்கள் போராடப் போகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.

“தனி மனித ஈகோவினால்தான் சங்கங்கள் சாகின்றன” என்று பல திரையுலக பிரபலங்கள் சொல்லி வந்தார்கள். அது இப்போது டி.ராஜேந்தரின் இந்த புதிய சங்க முடிவிலும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

இந்தத் தமிழ்த் திரையுலகத்தை இனிமேல் ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்..!

- Advertisement -

Read more

Local News