கதாசிரியரும், நடிகரும், இயக்குநருமான விஜய் கிருஷ்ணராஜ் தமிழ் சினிமாவின் மறக்கவியலாத திரைப்படங்களில் ஒன்றான ‘உதிரிப்பூக்கள்’ படத்தின் கதை ஆக்கத்தில் பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அதில் “உதிரிப்பூக்கள்’ படத்தில் இடம் பெற்ற முக்கியமான இரண்டு காட்சிகளே, அந்தப் படத்தை ‘ஒரு காவியம்’ என்று சொல்லும் அளவுக்குக் கொண்டு போயின…” என்கிறார்.
‘உதிரிப்பூக்கள்’ படம் பற்றி அவர் மேலும் பேசும்போது, “ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படம் பெரிய வெற்றியடைந்ததை அடுத்து மகேந்திரனுடன் எனக்கு நல்லப் பழக்கமானது. அப்போதுதான் ‘உதிரிப்பூக்கள்’ படத்தைத் துவக்கலாம் என்று அவர் நினைத்திருந்த நேரம்.
அது புதுமைப்பித்தன் எழுதிய ‘சிற்றன்னை’ என்னும் சிறுகதையின் வடிவம். ஆனால், அது சினிமாவுக்குப் போதாமையால் கூடுதல் காட்சிகளையும், கதையையும் எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது.

தனியார் ஹோட்டலில் தங்கி நாங்கள் டிஸ்கஷன் செய்தோம். அப்போது விஜயன் தன் மைத்துனியை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். ஆனால் மைத்துனி அதை விரும்பவில்லை. மாறாக தன் விருப்பத்தின் பேரில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்.
அந்தக் கல்யாணப் பத்திரிகையை கொடுப்பதற்காக விஜயனின் வீட்டிற்கு வருகிறார். விஜயன் தனக்குக் கிடைக்காத மைத்துனி வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற கோபத்தில் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும். இப்படித்தான் கதையில் நாங்கள் பேசியிருந்தோம்.
ஆனால், இந்த இடத்தில் நான் ஒரு ஐடியாவை மகேந்திரனிடம் கூறினேன். “பாலியல் பலாத்காரம் என்பது எல்லா படங்களிலும் வரிசையாக வந்துக்கிட்டிருக்கு. நாம் கொஞ்சம் வித்தியாசமா செய்வோம். விஜயன் பாலியல் பலாத்காரம் செய்யாமல் ‘நீ உன் கணவனுடன் இருக்கும் ஒவ்வொரு நேரமும் இந்தச் சம்பவம் உனக்கு ஞாபகத்துக்கு வந்துக்கிட்டே இருக்கணும். இதுதான் நான் உனக்குக் கொடுக்கிற தண்டனை’ என்று சொல்வதுபோல் வைத்துவிட்டால் நன்றாக இருக்கும்..” என்றேன்.

மகேந்திரன் மிகச் சிறந்த கலைஞன். எந்தவொரு யோசனையும் அவருக்குப் பிடித்துப் போனால் அதை கவிதை வடிவத்தில் படமாக்கிவிடுவார். அப்போது நான் சொன்னதும் அவருக்குப் பிடித்துப் போக அப்படியே படமாக்கினார்.
இதேபோல் படத்தின் கிளைமாக்ஸில் விஜயன் ஆற்றுக்குள் போய் தானாகவே தற்கொலை செய்து கொள்ளும் காட்சியைப் பற்றியே நாங்கள் முதலில் யோசிக்கவில்லை. ஊர்க்காரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவரைக் கொலை செய்வது போலத்தான் திரைக்கதை அமைந்திருந்தது.

“இதுவும் எல்லா படங்களிலும் வந்துவிட்டது. வந்து கொண்டிருந்தது. எனவே இதையும் நாம் மாற்றியாக வேண்டும். வித்தியாசமாக ஒரு இடத்தில் எல்லைக்கு அவனைக் கொண்டு வந்து நிறுத்திய ஊர்க்காரர்கள், ‘இப்ப திரும்பி வந்தால் நாங்களே உன்னை வெட்டிக் கொல்வோம். அது வேண்டாம்ன்னா நீயே கீழ குதிச்சு செத்திரு’ என்று சொல்வதுபோல வைத்தால் சிறப்பாக இருக்கும்…” என்றேன்.
மகேந்திரன் இதையும் அப்படியே ஏற்றுக் கொண்டார். சொன்னது போலவே அனைத்துக் காட்சிகளையும் ரம்மியமாக, கவிதை வடிவில் வடித்துக் கொடுத்தார். இதனாலேயே அந்தப் படம் இன்றுவரையிலும் மறக்க முடியாத ஒரு காவியமாக தமிழ்த் திரையுலகத்தில் வாழ்ந்து வருகிறது..” என்றார் இயக்குநர் விஜய் கிருஷ்ணராஜ்.