காவல் துறைக்கும், ஒரு சாமானியனுக்கும் உள்ள உறவு முறையில் தலை விரித்தாடும் ஈகோவை, அறம் மீறிய செயலை பேச முற்பட்டிருக்கிறது இந்த ‘காவல்துறை உங்கள் நண்பன்’ திரைப்படம்.
படத்தின் டைட்டிலை மனதில் வைத்து காவல்துறைக்கும், பொதுஜனத்திற்குமான நட்பை இப்படம் பேசி இருக்குறது என்ற எதிர்பார்ப்பில் போனால்… அங்கு வேறோர் அனுபவம் காத்திருக்கிறது.
காவல் துறையினரின் சுயநலத்திற்கு அப்பாவிகளை அவர்கள் எப்படி பயன்படுத்துவார்கள் என்ற ரணம் மிகுந்த வதைகளை ‘விசாரணை’ படம் மூலம் மிக காத்திரமாக பேசியிருந்தார் இயக்குநர் வெற்றிமாறன். இந்தப் படத்தையும் வெற்றி மாறனே வழங்கி இருப்பது சாலப் பொருத்தம்.
படத்தின் நாயகன் சுரேஷ் ரவி தன் காதல் மனைவியோடு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். அவருக்கு வெளிநாடு செல்ல வேண்டும் என்ற கனவும் இருக்கிறது. அதற்காக அவர் உணவு சப்ளை செய்யும் வேலை செய்து கொண்டே பணம் சேர்க்கிறார்.
இந்த நிலையில் ஒரு நாள் அவரது மனைவி ரவீனா ரவியை மூன்று பிக்பாக்கெட் பேர்வழிகள் வழிமறித்து அவரது நகைகளை அபேஸ் செய்வதோடு அவரை பாலியல் ரீதியாக சீண்டியும் விடுகிறார்கள்.
வெகுண்டெழும் சுரேஷ் ரவி அவர்களை தேடிச் செல்லும்போது போலீஸ் இன்ஸ்பெக்டரான மைம் கோபியிடம் ஹெல்மெட் போடாமல் வந்ததிற்காக மாட்டுகிறார். அங்கிருந்து விரிகிறது கதை.
அதன் பின் மைம் கோபிக்கும் ஹீரோ சுரேஷ் ரவிக்குமான பஞ்சாயத்தே மொத்தப் படமும்.
இயல்பாகவே பொதுஜனத்திடம் இருந்து நாம் மேம்பட்டவர்கள் என்ற எண்ணம் காவல் அதிகாரிகளுக்கு உண்டு. அதனால் பொது ஜனம் அவர்களை எதிர்த்துக் கேள்வி கேட்டால் அவர்களின் ஈகோ எகிறும். அதை திரைக்கதையில் மிகச் சரியாக காட்டியிருக்கிறார் இயக்குநர் ஆர்.டி.எம்.
மைம் கோபி என்ட்ரிக்குப் பிறகு சூடு பிடிக்கும் கதை பெரும்பாலான இடங்களில் கவனிக்க வைக்கிறது என்பது படத்தின் பாசிட்டிவ்தான். ஆனால், அழுத்தமில்லாத காட்சிகள் படம் நெடுக வந்து நம்மை படத்தில் இருந்து அந்நியப்படுத்தி விடுகிறது. பின் லாஜிக் கேள்விகளும் படமெங்கும் பல்லிளிக்கிறது.
குறிப்பாக மைம் கோபி சுரேஷ் ரவியை அடிப்பதை தானே ஆள் வைத்து வீடியோ எடுக்கிறார் என்பதெல்லாம் காதில் சுத்துப் பூ. ஹீரோவை ஒரு சாமானியனாக கட்டமைத்துள்ள இயக்குநர் அவரின் மனநிலையை படத்தில் பிரதிபலிக்க விடவில்லை.
ஒரு கட்டத்திற்குப் பின் தன் பக்கம் நியாயமே இருந்தாலும் தன் சூழல் கருதி நமக்கு ஏன் வம்பு என்று தான் சாமானியன் நினைப்பான். ஆனால் இதில் ஹீரோவிற்கு மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் கமிஷ்னர் அலுவலகம் செல்லும் தைரியம் வருகிறது. அதை ஹீரோயிஷமாக எடுத்துக் கொண்டாலும் அந்தக் கேரக்டர் அப்படி வடிவமைக்கப்படவில்லையே பாஸ்..?
மேலும் தூத்துக்குடி சாத்தான்குளம் சம்பவங்கள் எல்லாமே காவல் துறை என்றாலே அய்யோ என்று அலரும் சூழல் உருவாகியுள்ள நேரம். அதை மேலும் ஊக்கப்படுத்தும் அளவுக்கு எல்லாப் போலீஸுமே ஆபத்தானவர்கள் என்று காட்டி கிலி ஏற்படுத்துகிறார்கள்.
ஊறுகாய் போல ‘சூப்பர் குட்’ லெட்சுமணன் கேரக்டரை நல்ல போலீஸாக காட்டினாலும், அவரால் எந்தப் பிரயோசனமும் ஹீரோவிற்கு இல்லை. இதெல்லாம் படத்தின் மைனஸ் ஏரியா.
படத்தின் ஆகப் பெரும் ப்ளஸ் மைம் கோபியின் அபாரமான நடிப்பு. ஒரு கட்டத்தில் ஸ்கிரீனுக்குள் போயி நாமே அவரைக் கேள்வி கேட்போமா என்றளவிற்கு அசத்தி இருக்கிறார். சுரேஷ் ரவி ஓரளவு தனது எமோஷனலை படத்தில் காட்டியிருக்கிறார். நாயகி ரவீணா ரவி ஒரு மிகையற்ற நடிப்பை வழங்கி ஈர்க்கிறார்.
படத்தின் ஒளிப்பதிவும், பின்னணி இசையும் கதைக்கு வலு சேர்த்துள்ளன. ஒரு நல்ல கதையோடு களம் இறங்கியவர்கள் திரைக்கதையை இன்னும் கொஞ்சம் கூர்மை செய்திருக்க வேண்டும். கூடவே, லாஜிக் மேட்டர்களையும் சரி செய்திருக்கலாம்.
செய்திருந்தால்.. ஒரு நண்பனாக / நல்ல ரசிகனாக ‘பலே’ என்று சொல்லி நிச்சயமாகக் கை குலுக்கி இருக்கலாம்.