நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கும் அவரது கணவர் வம்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பிரிந்துவிட்டதாக அவ்வப்போது வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரம்யா கிருஷ்ணன் தனது குடும்ப வாழ்க்கை குறித்து விளக்கம் அளித்துள்ளார். பணிசார்ந்த காரணங்களுக்காகவே இருவரும் வெவ்வேறு நகரங்களில் வசிப்பதாகவும், தங்களுக்குள் எந்தப் பிரிவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “எனக்கு நாடகங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தபோது ஹைதராபாத்தில் வசித்து வந்தேன். அதனால் அடிக்கடி சென்னை மற்றும் ஹைதராபாத் இடையே பயணம் செய்ய வேண்டியிருந்தது. நான் ஒவ்வொரு முறையும் வெளியூர் சென்று திரும்பும்போதும் எனது மகனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் நானும் எனது கணவரும் ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்தோம். மகனை சென்னையில் உள்ள பள்ளியில் சேர்த்துவிட்டு, நானும் சென்னையிலேயே தங்கிவிட்டேன்.
நாங்கள் இருவரும் இன்னும் கணவன் – மனைவியாகவே இருக்கிறோம். வெவ்வேறு நகரங்களில் வசிப்பது முழுக்க முழுக்க எங்களது வேலை மற்றும் குடும்பச் சூழலைக் கருத்தில் கொண்டு எடுத்த முடிவுதான். இருவரும் அவரவர் இடங்களில் மகிழ்ச்சியாகவும் வசதியாகவும் வாழ்ந்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஏற்பாடு தற்போது இருவருக்குமே வசதியாக இருப்பதாகக் குறிப்பிட்ட ரம்யா கிருஷ்ணன், “நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றவாறு எடுத்த முடிவு இப்போது எங்களுக்குப் பழகிவிட்டது. ஒரே இடத்தில் இருந்து அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வதைவிட, இப்படி இருப்பதால் நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். எங்களது திருமணத்துக்கு முன்பே வம்சி என்னிடம், ஏன் திருமணம் செய்துகொள்ள வேண்டும், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழலாமே என்று கேட்டார். அப்போதே அவரது யோசனைக்கு நான் சம்மதித்திருக்க வேண்டும்” என்று நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.
