பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன், கடந்த அக்டோபர் 29-ம் தேதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் கிருஷ்ணர் பிரார்த்தனை ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதில், “உங்கள் யானைகளைக் கொண்டு வாருங்கள். நாங்களும் கொண்டு வருகிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, ஓர் ஊடகம் அமிதாப் பச்சன் தனது எதிரிகளுக்கு யானைகளையும் குதிரைகளையும் கொண்டு வருமாறு சவால் விடுத்ததாகச் செய்தி வெளியிட்டது. இதனால் கோபமடைந்த அமிதாப், அந்தச் செய்திக்கு எதிராகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
அந்தப் பதிவில், “யானைகளைக் கொண்டு வரச் சொல்வது கிருஷ்ணர் பிரார்த்தனையின் ஒரு பகுதியாகும். ஆனால், அந்த ஊடகம் தனது விளம்பரத்துக்காக எனது வார்த்தைகளைத் திட்டமிட்டு திரித்துள்ளது. இது கிருஷ்ணர் பிரார்த்தனைக்கு இழைக்கப்பட்ட அநீதி.எனக்கு சமூக வலைதளத்தில் 5 கோடி பின்தொடர்பவர்கள் உள்ளனர். அவர்களில் 10 சதவீதம் பேர் திருப்பி அடிக்கப் போதுமானவர்கள். அவர்கள் எனது சிக்னலுக்காகக் காத்திருக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
