கருணாஸ், வெற்றி மற்றும் வாணி போஜன் நடிக்கும் ‘ரேவன்’ – உண்மைச் சம்பவங்களின் தாக்கத்தில் உருவாகும் கிரைம் த்ரில்லர்!

கருணாஸ், வெற்றி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படம் ‘ரேவன்’. இதில் வாணி போஜன், அனுமோள், ரவீணா, விஷ்வமித்ரன், ‘ராட்சசன்’ வினோத் சாகர், சரவணன் ஷக்கி, சுபத்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சேதுராஜன் ராஜகோபால் மற்றும் ஆர்.வி. சரண் ஒளிப்பதிவுப் பணிகளை மேற்கொள்கின்றனர். வே. வெற்றிவேல் சந்திரசேகர் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பொன்ஃபோர்ட் கிரியேட்டிவ் சொலுஷன்ஸ் நிறுவனம் சார்பில் செல்ல முத்து குப்புசாமி இப்படத்தைத் தயாரிக்கிறார்.

இப்படம் குறித்து இயக்குநர் வெற்றிவேல் சந்திரசேகர் கூறுகையில், “இது ஒரு கிரைம் த்ரில்லர் திரைப்படம். நந்தன் ஸ்ரீதரன் எழுதிய ‘படுகளக் காதை’ நாவலைத் தழுவி இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளேன். சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் சுமார் 30 கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகளுடன் தொடர்புடையதாகக் கூறப்பட்ட தொடர் கொலையாளி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவத்தின் தாக்கமும் திரைக்கதையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்தச் சம்பவத்தை அப்படியே படமாக்காமல், அதன் தாக்கத்தில் விறுவிறுப்பான கதையை உருவாக்கியுள்ளோம்” என்றார்.

மேலும், இப்படத்தில் காக்கைக்கும் முக்கியப் பங்கு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். காகத்தை முன்னோர்களின் வடிவமாகக் கருதும் நம்பிக்கைக்கும் படத்தின் கதைக்கும் தொடர்பு இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் காக்கையைத் தத்ரூபமாக உருவாக்கிப் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading