நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5-ம் தேதி வெளியாக உள்ளது. இந்திய இதிகாசமான ராமாயணத்தைப் புதிய தொழில்நுட்பங்களுடன் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ள படக்குழு, இப்படத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்லும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இதுகுறித்து தயாரிப்பாளர்கள் நமித் மல்கோத்ரா, யஷ் மற்றும் இயக்குநர் நிதேஷ் திவாரி வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவின் தலைசிறந்த இதிகாசத்தை உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதே தங்களது நோக்கம் என்று தெரிவித்துள்ளனர். இதற்காக சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் படத்தின் சர்வதேச விளம்பரப் பிரசாரத்தைத் தொடங்குகிறது.
உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு, குறிப்பாக ராமாயணத்தைப் பற்றி அறியாதவர்களுக்கு, இந்த இதிகாசத்தை அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கமாகும். இதற்கிடையே, சர்வதேச ரசிகர்களைக் கவரும் வகையில் படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
