இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவான ‘புஷ்பா 2’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சுனில் மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு, நடிகர் அல்லு அர்ஜுன் அடுத்ததாக இயக்குநர் அட்லீயுடன் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை, இன்று அல்லு அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில், இயக்குநர் சுகுமாரிடம் “தமிழில் நீங்கள் ஒரு திரைப்படம் இயக்க விரும்பினால் எந்த நடிகரை தேர்வு செய்வீர்கள்?” என கேட்டபோது, இயக்குநர் சுகுமார், “நான் தமிழில் ஒரு படத்தை இயக்கினால், நடிகர் விஜய், அஜித் மற்றும் கார்த்தியுடன் வேலை செய்ய விரும்புகிறேன்” என கூறியுள்ளார்.