வசந்தபாலன் இயக்கத்தில் ஜீ5 ல் வெளியான ‘தலைமைச் செயலகம்’ வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வெப்சீரிஸில் நடித்த ஸ்ரேயா ரெட்டி குறித்து இயக்குனர் வசந்தபாலன் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார், அது அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
தலைமைச் செயலகம் வெப்சீரிஸ் மே 17ஆம் தேதி வெளியானது, இதில் எட்டு எபிசோட்கள் உள்ளன. இது ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது என்றாலும், சில விமர்சனங்களும் இருக்கின்றன. இந்த தொடரில் நடித்த கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, பரத், சந்தான பாரதி, கனி குசுருதி, தர்ஷா குப்தா போன்ற நடிகர்கள் தங்களது இயல்பான நடிப்பால் கதைக்கு தேவையான நடிப்பை கொடுத்துள்ளனர்.
வசந்தபாலன் இயக்கும் படங்கள் தமிழ் சினிமாவின் சொல்லப்படாத பக்கங்களை வெளிப்படுத்துவதால் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. ‘அங்காடித்தெரு’ திரைப்படத்தில் ஜவுளிக்கடையில் வேலை செய்பவர்களின் வலி, வேதனை, காதல், அவமானம் ஆகியவற்றை திறம்படக் காட்டியிருப்பார், இதன் எதிரொலியாக கேரள அரசு ஜவுளி கடைகளில் வேலை செய்பவர்களுக்கு அமர்வதற்கான சேர் வழங்க வேண்டும் என அறிவிப்பு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இயக்குனர் வசந்தபாலன் தன்னுடைய facebook பக்கத்தில் நடிகை ஸ்ரேயா ரெட்டி குறித்து இன்று ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில், கொற்றவை ( sriya reddy ) Very powerful presence.. படப்பிடிப்பு நடக்கும் நாட்களில் முதல்பட கதாநாயகி போல பதட்டமாக என்னிடம் “நல்லா வருதுல்ல ! எப்படி வருது ? நீங்க happy ஆ? சுழல் அளவுக்கு பேர் வாங்கிடுமா? அதை விட கம்மியா? இல்ல அதிகமா? விலங்கு,அயலி அளவுக்கு வெற்றியடையுமா? உங்களுக்கு புரொடக்சன் சப்போர்ட் பண்றாங்களா? சேனல் happyஆ? ” என்று ஆங்கிலம் கலந்த தமிழில் ஒரு நாளைக்கு பல்வேறு வார்த்தைகளில் சுத்தி சுத்தி இணையத்தொடரின் தரம்,வெற்றி பற்றிய அக்கறையுடனே கேள்வி கேட்டபடியிருப்பார்கள்.
என் மேல் கொண்ட நம்பிக்கையிலே மட்டுமே இந்த தொடரில் நடிக்க சம்மதித்தார்கள். அவரை நடிக்க விடாமல் ஆயிரம் சக்திகள் இடையூறு செய்த போதும் I will do only for vasanthabalan என்று சொல்லி விட்டு எனக்காக தொடருக்குள் வந்தார்கள். தொடரின் வெற்றியில் முதல் மகிழ்ச்சி கொற்றவை தான்.. என்று வசந்த பாலன் குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கு பலரும் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.