சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் புஷ்பா 2 இந்த படத்தின் ஓடிடி விற்பனை இதுவரை காணாத அளவுக்கு பல கோடிகளுக்கு விற்பனையாகி உள்ளதாக பிரமிக்க வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
புஷ்பா 1 படத்தின் ப்ளாக் பஸ்டர் வெற்றிக்கு பிறகு புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது.நடிகர் ஐகானிக் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா திரைப்படம் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி இருந்தது.இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை அல்லு அர்ஜுன் வென்றிருந்தார்.
புஷ்பா படத்தின் முதல் பாகத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் நிறுவனம் சுமார் 100 கோடி கொடுத்து வாங்கியது. தற்போது புஷ்பா 2 அதை விட கிட்டத்தட்ட மும்மடங்கு தொகைக்கு விற்பனையாகி இருப்பதாக ஆச்சரியமூட்டும் தகவல் கிடைத்துள்ளது.
இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படமே இதுவரை அதிக பட்சமாக 175 கோடிக்கு 3 ஓடிடி நிறுவனங்கள் வாங்கின. இந்நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனதுக்கு மட்டுமே சுமார் 275 கோடி ரூபாய்க்கு அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தின் டிஜிட்டல் உரிமம் விற்கப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளது.இதுவரை எந்தவொரு படத்துக்கும் இந்தளவுக்கு அதிகப்படியான தொகையை வெறும் டிஜிட்டல் உரிமத்துக்காக மட்டுமே எந்தவொரு ஓடிடி நிறுவனமும் கொடுத்தது இல்லை எனக் கூறப்படுகிறது.