Thursday, November 21, 2024

ரைட்டர் – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தொடர்ந்து மானுட விடுதலையைப் பேசும் படங்களை தயாரித்து வரும் இயக்குநர் பா.ரஞ்சித் அடுத்து தனது நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக தயாரித்துள்ள படம் ‘ரைட்டர்’.

பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணி புரிந்த ப்ராங்க்ளின் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

தனது உதவியாளர்கள் படம் செய்வதற்கான முழுத் தகுதியோடு இருந்தால் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க ரஞ்சித் தயங்குவதே இல்லை. அந்த வகையில் அவருக்கு ஒரு நீல வணக்கம்.

ரைட்டரின் கதை என்ன?

காவல் துறையில் எழுத்தர் பணி என்பது மிக முக்கியமான பணி. அந்தப் பணியை மிக நேர்மையாக செய்து வருகிறார் திருச்சி அருகேயிருக்கும் திருவெறும்பூர் காவல் நிலைய எழுத்தரான சமுத்திரக்கனி. அவருக்கு இரண்டு மனைவிகள். ஒரு மனைவியோடு காலந்தள்ளுவதே இந்தக் காலத்தில் குதிரைக் கொம்பு. இரு மனைவிகள் என்றால் நிலைமை எப்படி இருக்கும்? ஆனால் சமுத்திரக்கனி எமோஷ்னலாக இருவரிடம் பாசக்காரராக இருக்கிறார்.

காவல் துறைக்கு என்று தனிப்பட்ட முறையில் ஒரு யூனியன் வேண்டும் என்பது சமுத்திரக்கனியின் கனவு.  அதற்காக அவர் சலிப்பின்றி கோர்ட் வாசல் ஏறுகிறார். ஆனால் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கும் போஸ் வெங்கட்டிற்கு அது சிறிதும் பிடிக்கவில்லை. போஸ் வெங்கட் சமுத்திரக்கனியை சென்னையில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு டிரான்ஸ்பர் செய்து விடுகிறார்.

சென்னையில் பணியில் சேர வரும் சமுத்திரக்கனிக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. ஒரு லாட்ஜில் ஒரு இளைஞனை அடைத்து வைத்து அங்கு கனியை காவல் இருக்கச் சொல்கிறார்கள். அந்த இளைஞன் மீது எந்தத் தவறும் இல்லை என்று சமுத்திரக்கனிக்கு தெரிய வருவது.

மேலும், அந்த இளைஞன் வசமாக காவல்துறை வைத்த பொறியில் சிக்க சமுத்திரக்கனியும் ஒரு காரணமாக இருக்கிறார்.   அந்த குற்றவுணர்ச்சி அவரைத் துன்புறுத்த  இளைஞனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று முயற்சிக்கிறார். அவர் முயற்சி பலித்ததா? என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

போலீஸ் ஸ்டேசன் ரைட்டராக சமுத்திரக்கனி கதைக்கேற்றபடி தன் உடலையும், உடல் மொழியையும் மாற்றியிருக்கிறார். அவர் நடிப்பில் சின்ன மெனக்கெடல் தெரிகிறது.

அப்பாவி இளைஞனாக வரும் ஹரி மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். மெட்ராஸ்’ படத்தில் ஜானியாக நடித்தவர்தான் இந்த ஹரி. தொடர்ந்து இவர் கவனம் ஈர்த்து வருகிறார்.

படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய முக்கியமான கேரக்டர்  சுப்பிரமணிய சிவா. ஹரியின் அண்ணனாக அப்பாவி கிறிஸ்துவனாக வாழ்ந்திருக்கிறார். மிக தேர்ந்த நடிப்பு அவருடையது. படத்தில் சில காட்சிகளில் பார்வையாளர்களுக்கு கண்ணீர் பொங்கும் என்றால் அதற்கு காரணம் சுப்பிரமணிய சிவாவின் நடிப்புதான். இனிய சில காட்சிகள் என்றாலும் நல்ல நடிப்பைக் காண்பித்திருக்கிறார். வடமாநில காவல் உயரதிகாரியாக நடித்தவர் மிரட்டி இருக்கிறார். அதேபோல் கவிதா பாரதி கேரக்டரும் அருமை.

கோவிந்த் வசந்தா இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும் பின்னணி இசை பராவாயில்லை. சின்ன பட்ஜெட் என்ற தாக்கம் எங்கும் தெரியாத வகையில் கேமராமேன் ஷாட்களை அமைத்துள்ளார்.

முன் பாதியில் படம் சற்று மெதுவாக மூவ் ஆவது சின்ன மைனஸ். பின் பாதியில் படம் சரசரவென பறக்கிறது. முக்கியமாக காவல் துறையில் நடக்கும் தீண்டாமையை கண் முன்னே கொண்டு வந்த வகையில் இந்த ‘ரைட்டர்’ ஈர்க்கிறார்.

RATING : 4 / 5

- Advertisement -

Read more

Local News