ஆந்திராவின் துணை முதல்வராக பணியாற்றும் பவன் கல்யாண், தனது அரசியல் பணிகளுக்கிடையில், முன்னதாகவே ஒதுக்கப்பட்ட படங்களை முடிக்க தற்போது நேரம் ஒதுக்கியுள்ளார். முதலில், அவர் நடித்த ‘ஹரி ஹர வீர மல்லு’ என்ற படத்தின் பணிகளை முழுமையாக முடித்துவிட்டார். அதன் பிறகு ‘ஓஜி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் ஆரம்பமானது.

மும்பையில் நடைபெற்ற இந்த படப்பிடிப்பில், பவன் கல்யாணும் இம்ரான் ஹாஸ்மியும் கலந்து கொண்ட காட்சிகள் பதிவு செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில், படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது இம்ரான் ஹாஸ்மியின் உடல்நிலை மோசமாகியதாகத் தெரியவந்தது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு டெங்கு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். அதனால், அவருக்கு குறைந்தது ஒரு வாரம் ஓய்வு அவசியம் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இம்ரான் ஹாஸ்மியின் உடல்நலக் குறைவு காரணமாக ‘ஓஜி’ படத்தின் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது. தற்போது அவருக்கும் பவன் கல்யாணுக்கும் இடையே வரும் சில முக்கியமான காட்சிகள் மட்டுமே எடுக்க வைக்கப்பட்டுள்ளன. எனவே, இம்ரான் ஹாஸ்மியின் உடல்நிலை மீண்டும் மேம்பட்ட பிறகு, மீதமுள்ள படப்பிடிப்பை தொடர படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த திரைப்படம் செப்டம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனத் திட்டமிடப்பட்டுள்ளதால், அந்த தேதிக்குள் படப்பிடிப்பு பணிகளை முடிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.