விஜய் சேதுவைப் பார்த்தாவது சீனியர் நடிகர்கள் சிந்திப்பார்களா?

‘லாபம்’ படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மறுத்தது குறித்து நடிகர் விஜய் சேதுபதி விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் அளித்த பேட்டி ஒன்றில், “நான் லாபம் படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது படக்குழுவினர் கீர்த்தி ஷெட்டியை நடிகையாக ஒப்பந்தம் செய்யப்போவதாக கூறினர். அந்த நேரத்தில் ‘உப்பெனா’ படத்திலும் நடித்துக் கொண்டிருந்தேன். ‘உப்பெனா’வில் கீர்த்தி எனக்கு மகளாக நடித்திருந்தார்.

‘லாபம்’ படக்குழுவினர் என்னுடன் கீர்த்தி ஷெட்டியை எனக்கு கதாநாயகியாக நடிக்க வைக்கும் திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஒரே நேரத்தில் படமாக்கப்படும் இரண்டு படங்களில், ஒன்றில் மகளாக நடிக்கும் கீர்த்தி ஷெட்டியுடன் மற்றொரு படத்தில் எப்படி ரொமான்ஸ் செய்ய முடியும்? அது ஒரு சங்கடமான சூழ்நிலை என்பதால் ‘லாபம்’ படத்தில் கீர்த்தியை நாயகியாக்க வேண்டாம் என படக்குழுவினரிடம் கூறினேன்” என்றார்.

மேலும், “உப்பெனா பட க்ளைமாக்ஸ் காட்சியில் நான் கீர்த்தியிடம், என்னை நிஜமாகவே உங்களின் தந்தையாக நினைத்துக்கொள்ளுங்கள் என்று கூறினேன். எனக்கு 15 வயதில் ஒரு மகன் இருக்கிறார். கீர்த்தியைவிட அவர் சில வருடங்களே இளையவர். அதனால்தான் அவரை என் மகளாக நினைத்தேன். அவருடன் நிச்சயமாக என்னால் ரொமான்ட்டிக்காக நடிக்க முடியாது” என்றார் விஜய் சேதுபதி.

இந்த நிலையில், பத்திரிகையாளர் செல்வம், “விஜய் சேதுபதியை பார்த்தாவது, சீனியர் நடிகர்கள் திருந்துவார்களா” என ஒரு பேட்டியில் கேள்வி எழுப்பி உள்ளார்.