கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டி ஒன்றி பேசிய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா,. ‘பருத்தி வீரன்’ படத்தின்போது நடந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இயக்குநர் அமீர் மீது குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக தன்னுடைய தரப்பு விளக்கத்தை அமீர் அறிக்கையாக வெளியிட்டிருந்தார். அதில் ‘பருத்திவீரன்’ தொடர்பாகவும், தன்னுடைய திரைப்பயணம் தொடர்பாகவும், ஞானவேல்ராஜா கூறிய கருத்துகளில் ஒன்றில் கூட உண்மையில்லை என்றும், அனைத்தும் புனையப்பட்ட பொய்கள் என்றும் கூறியிருந்தார்.
இந்த விவகாரத்தில் இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் அமீருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் ஞானவேல்ராஜாவை நேரடியாக குறிப்பிட்டு விமர்சித்தனர். இதனையடுத்து இந்த விவகாரம் சூடுபிடித்தது. சமுத்திரக்கனி தன்னுடைய அறிக்கையில், களத்தில் அமீருடன் இருந்து நேரடியாக பார்த்த கார்த்தி கூட இந்த விவகாரத்தில் அமைதியாக இருப்பதுதான் வேதனை தருவதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் ‘பருத்திவீரன்’ படத்தின்போது ஏற்பட்ட பொருளாதார சிக்கலால் சூர்யாவும் ‘படத்தை நீங்களே வச்சிக்கோங்க அமீர் அண்ணா’ என்று கைவிரித்துவிட்டதையும் மேற்கோள் காட்டியிருந்தார்.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கும் சூர்யா, கார்த்தி இருவரும் இதில் தலையிட்டு விளக்கம் அளிப்பதே இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருவருமே இந்த விவகாரம் குறித்து இதுவரை எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வருகின்றனர்.