“தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்புக்களை தமிழகத்தி்ல்தான் நடத்த வேண்டும்” என்று இயக்குநர் பவித்ரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘வசந்த காலப் பறவை’, ‘சூரியன்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் பவித்ரன். இவர் நேற்று ஒரு திரைப்பட விழாவில் பேசும்போது, “தமிழ்ச் சினிமாவில் தயாரிக்கப்படும் பெரும்பாலான திரைப்படங்களின் படப்பிடிப்புகள் தமிழகத்தில் நடத்தப்படுவதே இல்லை.
அனைத்துப் பெரிய பட்ஜெட் படங்கள், பெரிய ஹீரோக்களின் படங்களின் படப்பிடிப்புகள் அனைத்தும் ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் ஸ்டூடியோவில்தான் நடைபெறுகிறது. இதனால் தமிழகத்தில் இருக்கும் திரைப்பட தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பறி போகிறது. இதைப் பற்றி எந்த பெரிய ஹீரோவும் கவலைப்படுவதே இல்லை.
தற்போது ஹைதராபாத்தில் பொன்னியின் செல்வன் ஷூட்டிங்கிற்காக மிகப் பெரிய அளவுக்கு செட் போட்டு படமாக்கி வருகிறார்கள். எத்தனை தொழிலாளர்கள் அதில் பணியாற்றுகிறார்கள்..? அந்த வாய்ப்பு சென்னையில் கிடைத்திருந்தால் இங்கேயிருக்கும் எத்தனை தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்திருக்கும்..?
ஹைதராபாத் ராமோஜி ராவ் ஸ்டூடியோ இருந்த இடம் பெரும் பாறைகள் மிகுந்த பகுதி. அதையெல்லாம் தகர்த்துவிட்டு இப்படியொரு ஸ்டூடியோவை அவர்கள் நிர்மாணித்திருக்கிறார்கள். அதேபோல் சென்னையிலும் அரசிடம் சொல்லி ஏதாவது ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே ஒரு மிகப் பெரிய ஸ்டூடியோவை தமிழ்த் திரையுலகம் அமைக்க வேண்டும்.
தமிழகத்தில் என்ன வளம் இல்லை. எல்லாமே இங்கே இருக்கிறது.. ஆனால் இதை எடுத்துச் சொல்லி செய்வதற்குத்தான் ஆள் இல்லை.. தமிழ்த் திரையுலகத்தின் அனைத்து சங்கங்களும் ஒன்றுகூடி இதற்கு முடிவெடுக்க வேண்டும்..” என்று கேட்டுக் கொண்டார்.