அஜித்தின் ‘துணிவு’, விஜயின் ‘வாரிசு’ என இரண்டு படங்களும் வரும் பொங்கல் தினத்தன்று வெளியாகிறது. இரண்டு படங்களுக்கும் தலா நானூறு திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜ், “தமிழில் அஜீத்தைவிட விஜய்தான் பெரிய நடிகர். அவர்தான் நெம்.1. ஆகவே அவரது படத்துக்குத்தான் அதிக திரையரங்குகள் ஒதுக்க வேண்டும்” என்று தெலுங்கு யு டியுப் சேனல் ஒன்றில் தெரிவித்தார்.
இதையடுத்து அஜீத், விஜய் ரசிகர்கள் இணையத்தில் மோதி வருகின்றனர். தவிர ரஜினி, கமல் ரசிகர்களும் தங்களது ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ் சினிமாவின் மூத்த விநியோகஸ்தரும், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவருமான திருப்பூர் சுப்பிரமணியம் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர், “ ரஜினிகாந்த், விஜய், அஜித் தான் நம்பர் ஒன், என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள். ஆனால் விக்ரம் படம் வெளியான பிறகு கமல்தான் நம்பர் ஒன் என்றார்கள்.
அடுத்து பொன்னியின் செல்வன் படம் வெளியாகி, ‘விக்ரம்’ படத்தைவிட அதிக வசூலை அள்ளியது. அப்படியானால் அந்தப் படத்தில் நடித்த விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி.. யார் நெம்பர் ஒன்?
திரைப்படத்தைப் பொறுத்தவரை கதைதான் நெம்பர் ஒன். தில்ராஜு ஆர்வக்கோளாறில் பேசிவிட்டார். அதையெல்லாம் பொருட்படுத்வதே கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார் திருப்பூர் சுப்ரமணியம்.