மோகன்ராஜா இயக்கத்தில், ரவி மோகன் நடித்துக் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான படம் தான் ‘தனி ஒருவன்’. இப்படத்தில் அரவிந்த்சாமி, நயன்தாரா, ஹரிஷ் உத்தமன், கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம், ரசிகர்களிடமிருந்து மிகுந்த ஆதரவைப் பெற்று மிகப்பெரிய வெற்றி பெற்றது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகமான தனி ஒருவன் 2 தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2023ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு, தனி ஒருவன் 2 குறித்து எந்தவொரு அப்டேட்டும் வெளியாகவில்லை.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் மோகன்ராஜா, தனி ஒருவன் 2 குறித்து புதிய அப்டேட்டை பகிர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், “சில நாட்களுக்கு முன்பு இதற்கான சந்திப்பு அர்ச்சனா கல்பாத்தியுடன் நடந்தது. நான் கதையைச் சொன்னதும், ‘இது சரியான நேரம் இல்லை’ ஆனால் கண்டிப்பாக இப்படம் நடக்கும். சினிமா துறையின் நிலை கொஞ்சம் மாறட்டும் என்றார். நாங்கள் தொடர்ந்து கலந்துரையாடிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் நினைத்தபடி கண்டிப்பாக நடக்கும் என நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.