“எப்போது திருமணம்?”: அனுஷ்கா பதில்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த அனுஷ்கா ஷெட்டி, மூன்று வருட இடைவெளிக்கு பிறகு நடித்துள்ள படம், ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’. நவீன் பொலிஷெட்டி, முரளி சர்மா, நாசர், துளசி, ஜெயசுதா உட்பட பலர் நடித்துள்ளனர். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படம் நாளை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாகிறது.

இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத அனுஷ்கா, படம் பற்றி கூறியிருப்பதாவது:

இந்தப் படம், அவந்திகா என்ற முற்போக்கான பெண்ணைப் பற்றிய தனித்துவமான கதையைக் கொண்டது. இதில் லண்டனில் இருந்து வரும் சமையல் கலைஞராக நடித்துள்ளேன். அவருக்கு சோதனைக் குழாய் மூலம் குழந்தை வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பதை உணர்ச்சிகரமாகச் சொல்லும் படம் இது. இந்தப் படம் புதிய அனுபவத்தைத் தரும்.

திரைப்படங்களை பான் இந்தியா முறையில் வெளியிடுவது பற்றி கேட்கிறார்கள். இது முன்பே இருப்பதுதான். ஸ்ரீதேவி போன்றவர்கள் எப்போதோ அப்படி நடித்திருக்கிறார்கள். ஓடிடி, சமூக ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்பத்தால், உலகம் சிறு வட்டத்துக்குள் சுருங்கிவிட்டது. தங்கள் கதை அதிகமான பார்வையாளர்களைச் சென்றடைய வேண்டும் என்றுதான் திரைத்துறையினர் விரும்புகிறோம். அதனால் இது சரியானதுதான். நான் திரைத்துறைக்கு வந்து 18 வருடங்கள் ஆகிவிட்டன. ஆரம்பத்தில் நடிக்க வந்தபோது நடிப்பு பற்றி அதிகம் தெரியாது.நான் சந்தித்த மனிதர்கள் எனக்கு உதவினார்கள். சினிமாவில் தொடர்ந்து கற்றுக் கொண்டிருக்கிறோம்.

என் திருமணம் பற்றி கேட்கிறார்கள். திருமணத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால், அது இயல்பாக நடக்க வேண்டும். திருமணம் செய்ய வேண்டுமே என்ற கட்டாயத்தில் நடக்கக் கூடாது” என்றார்