நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த தெலுங்கு திரைப்படம் கல்கி 2898 ஏடி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 1100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, வரலாற்று சாதனை படைத்த இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று தொடக்கத்திலேயே அறிவிக்கப்பட்டது. முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியான நிலையில், இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குனர் நாக் அஷ்வின், கல்கி 2898 ஏடி படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பாக முக்கிய தகவலை வெளியிட்டார். “கல்கி 2 படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கும். அதற்கான முன்பணிகள் தற்போது நடந்துவருகின்றன. இப்படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பிக்கும் என்பது பிரபாஸ் தனது தேதிகளை உறுதி செய்த பின் அறிவிக்கப்படும். ஆனால், இப்படம் கண்டிப்பாக உருவாகும்,” என்று அவர் உறுதியளித்துள்ளார்.
பிரபாஸ் இப்படத்திற்குத் தேதிகளை தள்ளிப் போடுகிறார் என்ற வதந்தி கடந்த நாட்களாக பரவி வந்தது. இதனால் நாக் அஷ்வின், கல்கி 2 க்குள் வேறு ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் தான், இரண்டாம் பாகம் குறித்து புதிய அப்டேட் வழங்கியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.