Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

“ஆர்யா திடீர்ன்னு நல்லா நடிக்க ஆரம்பிச்சிட்டான்..” – நடிகர் விஷாலின் கிண்டல்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஷால் – ஆர்யா கூட்டணியில் உருவாகியுள்ள அதிரடி ஆக்சன் திரைப்படம் ‘ எனிமி’.

இந்தப் படத்தை மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் S.வினோத்குமார் தயாரித்திருக்கிறார்.

கதாநாயகியாக மிருணாளினி ரவி நடித்திருக்கிறார். மேலும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ் ராஜ், மம்தா மோகன்தாஸ், தம்பி ராமையா, கருணாகரன், மாளவிகா அவினாஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

பாடல்களை தமன் இசையமைக்க,  R.D.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். சண்டை இயக்கம் – ரவிவர்மா, பின்னணி இசை – சாம் C.S. படத் தொகுப்பு – ரெய்மான்ட் டெரிக் க்ரஸ்ட்டா.

அரிமா நம்பி’, ‘இருமுகன்’, ‘நோட்டா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய
இயக்குநர் ஆனந்த் சங்கர் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்த படம் வரும் தீபாவளியன்று திரைக்கு வருகிறது. இதையொட்டி இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஷால் பேசும்போது, “நீண்ட நாட்களுக்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. நான் முதலில் தயாரிப்பாளர் வினோத் குமார் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். மிகப் பெரிய பலம் அவர்தான்.

ஒவ்வொரு நாளும் நான் வீட்டுக்கு சந்தோஷமாக போகிறேன் என்றால் அதற்கு இந்த தயாரிப்பாளர் வினோத்குமார் தான் காரணம். எனக்கு ஒரு நல்ல ஒரு தயாரிப்பாளர் கிடைத்துள்ளார்.

அவர் பணத்தை மட்டுமே மனதில் வைத்து இந்தப் படத்தை தயாரிக்கவில்லை. அவர் நினைத்திருந்தால் இந்த படத்தை ஓடிடி க்கு பெரிய விலைக்கு விற்றிருக்கலாம். ஆனால் ரசிகர்கள் தியேட்டரில் ரசிக்க வேண்டுமென படத்தை தியேட்டருக்கு கொண்டு வந்ததற்கே அவரை வணங்க வேண்டும். அவருடன் அடுத்து ஒரு படத்திலும் இணைகிறேன்.

ஆனந்த் சங்கர் ஈகோ இல்லாத ஒரு மனிதர். அவர் முதலில் என்னிடம் கதை சொன்னபோது இந்தக்கதையில் ஜாமி ( ஆர்யா) இருந்தால் நன்றாக இருக்கும், அவரது பாத்திரத்தை இன்னும் வலுவாக்கினால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன்.

அற்புதமான திரைக்கதையுடன் வந்தார். அவரது கற்பனைதான் இந்தப் படம். ஆர்யாவிடம்.. உலகமே அழியப் போகிறது என்று சொன்னால், அசராமல் “இரு சைக்கிளிங் முடித்து விட்டு வருகிறேன்” என்று சொல்வார். எதையுமே சீரியஸாக எடுத்து கொள்ள மாட்டார். இப்போது என்னவென்று தெரியவில்லை திடீரென நன்றாக நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

இந்தப் படத்தில் ஒரு சண்டைக் காட்சியில் நடிக்கும் போது, அப்போதுதான் சர்பாட்டா படத்தில் நடித்துவிட்டு வந்திருந்தார். உண்மையிலேயே அந்த ஷூட்டிங்கில் பாக்ஸிங் கற்றுக் கொண்டு இந்த ஷூட்டிங்கிற்கு வந்து என்னை அடி வெளுத்து விட்டான்.

ஏற்கனவே அவருடன் அவன் இவன்’ படத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படமும் சூப்பராக இருக்கும்.. இன்னும் 10 வருடம் கழித்து பார்க்கும்போதும் இதே ரசனையோடு இருக்கும்.  அவருடன் இணைந்து மீண்டும் படம் செய்ய காத்திருக்கிறேன்.

மிருணாளினி ஆல்வேஸ் வெல்கம். நன்றாக நடித்திருக்கிறார். அடுத்த முறை, தயக்கமில்லாமல் நீங்கள் நடிக்கலாம். கருணாகரன் உடன் நடிக்கும்போது சிரிக்காமல் இருக்க முடியாது. அவர் நடிக்கும்போது நானும் மிருளானியும் சிரித்து கொண்டே இருப்போம்.

தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் 600 தியேட்டர்களில் மிகப் பிரமாண்டமாக இப்படம் வெளியாகவுள்ளது. இந்த எனிமி நீங்கள் திரையில் ரசித்து பார்க்கும் படமாக இப்படம்  இருக்கும். படத்தில் முதல் பத்து நிமிடங்கள் நானும் ஆர்யாவும் இருக்க மாட்டோம். இரண்டு சின்ன பையன்கள் நடித்திருக்கிறார்கள். அவர்களிடம் நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு அட்டகாசமாக நடித்துள்ளார்கள்…” என்றார்.

- Advertisement -

Read more

Local News