மலையாள நடிகர்கள் சங்கமான ‘அம்மா அமைப்பு’ பெண்களுக்கெதிரான குற்றங்களை விசாரிக்கும் பொருட்டு தங்களது சங்கத்திற்குள்ளேயே செயல்படும் ‘உள்ளீட்டு புகார் குழு’வை அமைத்துள்ளது.
இந்த புகார் குழுவுக்கு ‘அம்மா’ அமைப்பின் துணைத் தலைவர்களில் ஒருவரான நடிகை ஸ்வேதா மேனன் தலைமை தாங்குகிறார்.
மேலும் நடிகைகள் மாலா பார்வதி, குக்கூ பரமேஸ்வரன், ரச்சனா நாராயணன்குட்டி ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். “இந்தக் குழுவில் இடம் பெறவிருக்கும் வழக்கறிஞர் விரைவில் அறிவிக்கப்படுவார்…” என்று ‘அம்மா’ அமைப்பின் பொதுச் செயலாளரான நடிகர் எடவலா பாபு தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமாவில் பணியாற்றும் பெண்கள் பலரும் ஒன்று சேர்ந்து The Women in Cinema Collective (WCC) என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பின் சார்பாக நடிகைகள் பத்மப்பிரியா, ரீமா கல்லிங்கால் ஆகியோர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கினைத் தொடர்ந்திருந்தனர்.
அந்த வழக்கில், “சினிமாவில் பணியாற்றும் பெண்களுக்கெதிரான பாலியல் தொடர்பான பிரச்சினைகளையும், புகார்களையும் விசாரிக்க உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி ‘விசாகா’ கமிட்டியை அனைத்து சினிமா சங்கங்களிலும் அமைக்க உத்தரவிட வேண்டும்…” என்று கேட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேற்றைக்கு இதன் தீர்ப்பை அளித்தது. இந்தத் தீர்ப்பு வருவதற்கு ஒரு நாள் முன்னதாக ‘அம்மா’ அமைப்பு தங்களது சங்கத்தில் ‘விசாகா’ கமிட்டியை அமைத்திருப்பதாக அறிவித்துவிட்டது.