கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. இந்த படத்தில் சிம்பு மற்றும் திரிஷா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் விடிவி கணேஷ், கே.எஸ். ரவிக்குமார், ஜனனி ஐயர் ஆகியோருடன் சேர்ந்து சமந்தா மற்றும் நாக சைதன்யாவும் இந்த படத்தில் தோன்றியிருந்தனர்.
‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் இசையை ஏ.ஆர். ரஹ்மான் அமைத்திருந்தார், மேலும் இது அவரது சிறந்த ஆல்பங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. காதலர்களுக்காகவே உருவான திரைப்படமாக இது அழைக்கப்படுகிறது. சிறந்த விமர்சனங்களை பெற்ற இப்படம், வெளியான போதே பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது, இப்படம் ரீ-ரிலீஸில் மிக நீண்ட நாட்கள் (1000 நாட்கள்) திரையரங்குகளில் ஓடிய சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், இந்த திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த சந்தர்ப்பத்தில், நடிகை திரிஷா ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “என் திரைப்பயணத்தின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றான இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்கு கௌதம் மேனனுக்கு மனமார்ந்த நன்றி. இந்த படத்தில் நடித்ததில் பெருமை கொள்கிறேன். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ எனது இதயத்திற்கே மிகுந்த நெருக்கமான படம். ஜெஸ்ஸி என்ற கதாபாத்திரத்தை இன்னும் நினைவில் வைத்திருக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றி” என்று தெரிவித்துள்ளார்.