கேரளாவில் அதிக வசூலை பெற்ற தமிழ்ப் படம் என்கிற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் நடித்த ‘விக்ரம்’ படம் கடந்த ஜூன் 3-ம் தேதியன்று வெளியானது. உலகம் முழுவதும் படம் வெளிவந்த நாள் முதல் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
பெரும்பாலான திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் திரையரங்குக் காட்சிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் வசூலும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இத்திரைப்படம் கேரளாவில் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
படம் வெளியான வெள்ளிக்கிழமை அதைத் தொடர்ந்த சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் கேரளாவில் இந்தப் படம் 15 கோடியே 72 லட்சம் ரூபாயை வசூலித்துள்ளது.
மேலும் திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாள்களிலும் மேலும் 6 கோடியே 57 லட்சம் ரூபாயை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் முதல் 5 நாள்களில் கேரளாவில் மட்டும் இந்த விக்ரம் படம் 22 கோடியே 29 லட்சம் ரூபாயை வசூலித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இதன் மூலமாக கேரளாவில் மிக அதிக வசூலைப் பெற்ற தமிழ்ப் படம் என்கிற பெருமையை இந்த ‘விக்ரம்’ படம் அடைந்துள்ளது.
ரசிகர்களின் வரவேற்பு இப்போதும் அதிகமாக இருப்பதால் கேரளாவில் இந்தப் படம் இன்னும் கூடுதல் வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.