‘லியோ’ முன்பதிவு: பிரிட்டனில்  ஒரே நாளில் 10,000+ டிக்கெட்டுகள் விற்பனை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதன் இங்கிலாந்து வெளியீட்டு உரிமையை அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெற்றுள்ளது. லியோ திரைப்படம் உலகளவில் வெளியிடப்படுவதற்கு 42 நாட்களுக்கு முன்னதாக, டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்ட நிலையில், இங்கிலாந்தில் ஒரே நாளில் 10,000+ டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் முன்னதாக விநியோகம் செய்த ‘வாரிசு’, திரைப்படம் ஜனவரி 2023-ல் முன்பதிவு ஆரம்பித்த முதல் 24 மணி நேரத்தில் சுமார் 2,000 டிக்கெட்டுகளை விற்று சாதனை படைத்தது. இந்நிலையில் “லியோ” திரைப்படம் அதை விட பன்மடங்கு அதிகமாக டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்துள்ளது.

அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தரப்பில், “லியோ படத்திற்கு முதல் நாளிலேயே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. விஜய், லோகேஷ் கனகராஜ், அனிருத், சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் த்ரிஷா உள்ளிட்ட பலமான கூட்டணியால், மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ரசிகர்கள் மிகப்பெரும் ஆதரவை தந்து வருகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.