பெற்றோரை சந்தித்த விஜய்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘லியோ’. இந்தப் படம் அக்.19-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதையடுத்து அவர் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய் 3 வேடங்களில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சினேகா, பிரியங்கா அருள் மோகன் நாயகிகளாக நடிக்க இருப்பதாகத் தெரிகிறது.

இதில் விஜய்யின் ஒரு வேடத்தை இளமையாகக் காண்பிக்க இருக்கின்றனர். இதற்காக படக்குழு சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தது. அங்கு கலிபோர்னியாவில் உள்ள சிஜி நிறுவனம் ஒன்றில், 3டி விஎஃப்எக்ஸ் (3D VFX) டெக்னாலஜியில் அவர் உடலை ஸ்கேன் செய்துள்ளனர். அந்தப் பணி முடிந்து நடிகர் விஜய் அண்மையில் சென்னை திரும்பினார்.

இந்த நிலையில், சென்னை திரும்பிய அவர் நேற்று (செப்.14) தனது பெற்றோரை நேரில் சந்தித்தார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் கருத்து வேறுபாடு நிலவுவதாகவும் இதனால் இருவரும் பேசிக் கொள்வதில்லை என்றும் கூறப்பட்டது. சமீபத்தில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சிறிய அறுவை சிகிச்சை நடந்து முடிந்த நிலையில், அவரை நேரில் சந்தித்த விஜய் அவரிடம் நலம் விசாரித்தார்.