“வடிவேலுவுக்கு நாய் சேகர் தலைப்பைவிடவும் சிறந்தத் தலைப்பு கிடைக்கும்” என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
சமீபத்தில் திரும்பவும் நடிக்க வந்திருக்கும் நடிகர் வடிவேலு லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் சுராஜின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் புதிய படத்திற்கு ‘நாய் சேகர்’ என்று பெயர் வைக்கப் போவதாக இயக்குநர் சுராஜ் அறிவித்திருந்தார்.
ஆனால் இதே தலைப்பில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நகைச்சுவை நடிகர் சதீஷ் நடிக்க ஒரு படம் தயாராகிவிட்டது. இந்தத் தலைப்பை விட்டுக் கொடுக்க முடியாது என்று அவர்களும் சொல்லிவிட்டதால் தற்போது வடிவேலு படத்திற்குப் புதிய டைட்டில் வைக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
இந்தச் சூழலில் நேற்றைக்கு கோவையில் பத்திரிகையாளர்களிடத்தில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், “வடிவேலு படத்திற்குப் புதிய டைட்டில் நிச்சயமாக இதைவிட சுவாரசியமானதாகக் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.
அவர் இது குறித்துப் பேசும்போது, “நான் நடித்திருக்கும் ‘டாக்டர்’ திரைப்படம் அக்டோபர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது, இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவது தயாரிப்பாளர் எடுத்த முடிவு, தியேட்டரில் படம் வர வேண்டும் என்பதுதான் எனது ஆசையும். எது சரியாக இருக்கிறதோ அதை செய்யுங்கள் என தயாரிப்பாளரிடம் சொல்லியிருந்தேன்.
தியேட்டரில் படம் பார்ப்பது ஒரு கொண்டாட்டம். எனது படம் ஒடிடியில் வெளியாகாமல் திரையரங்குகளில் வெளியாவது சந்தோஷம்தான். படத்தை வெளியிடுவது குறித்து நடிகர்கள் சேர்ந்து முடிவு எடுக்க முடியாது. தற்போது வெளியே வரும் படங்களை வியாபாரம் செய்வது கஷ்டமாக உள்ளது. படம் ரீலிஸ் ஆனால்தான் அதை நம்பியுள்ளவர்கள் வேலை நடக்கும்.
சதீஷ் நடித்த நாய் சேகர் படம் வெளியீட்டுக்கே ரெடியாகி விட்டது. நடிகர் வடிவேலிடம் சதீஷ் இதைப் பற்றி பேசியுள்ளார். சதீஷ் ஹீரோவாக நடிப்பதால் பெரிய டைட்டில் தேவைப்படுகிறது, வடிவேலுக்கு அது தேவைப்படாது. எந்த டைட்டில் வைத்தாலும் அவருக்கு பயங்கரமாகத்தான் இருக்கும். படத்தின் டைட்டில்களை தமிழில் வைப்பதுதான் நல்லது, நானும் என் படங்களின் தலைப்புகளை தமிழில்தான் வைக்க சொல்கிறேன்” என்றார் சிவகார்த்திகேயன்.