நடிகர் வடிவேலு மற்றும் பகத் பாசில் இருவரும் சேர்ந்து நடித்த ‘மாமன்னன்’ திரைப்படம் 2023ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதையடுத்து, இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘மாரீசன்’. இந்த திரைப்படம், ஆர்பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98வது தயாரிப்பாக உருவாகியுள்ளது. இப்படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கியுள்ளார்.

இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. மேலும் விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா உள்ளிட்ட பலரும் இதில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். கதையும், திரைக்கதையும், வசனங்களையும் வி. கிருஷ்ணமூர்த்தி எழுதி, கிரியேட்டிவ் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். ஒளிப்பதிவை கலைசெல்வன் சிவாஜி செய்துள்ளார்.
‘மாரீசன்’ திரைப்படம் ஜூலை 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்களும் டிரெய்லரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கிடையே படம் வெளியீடு தேதிக்குள் வந்துள்ளதால், தணிக்கை குழு இப்படத்திற்கு “யு/ஏ” சான்றிதழை வழங்கியுள்ளது.