சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் போலீஸாரின் விசாரணை தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ள நிலையில் அதில் குறிப்பிடப்பட்டுள்ள முரண்பட்ட தகவல்களால் குழப்பம்தான் ஏற்பட்டுள்ளது.
பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் சின்னத்திரை நடிகை சித்ரா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் தற்கொலை செய்து கொண்டார் என்றுதான் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் மற்றும் ஹோட்டல் ஊழியர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்துவரும் நிலையில் சித்ராவின் தந்தை காமராஜ் அளித்த புகாரில் பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் முரண்பட்ட தகவல்கள் பதிவாகியுள்ளது.
சித்ராவின் தந்தை அளித்த அந்தப் புகாரில் தனது மகள் சித்ராவிற்கும் ஹேம்நாத்துக்கும் பிப்ரவரி மாதம் 10-ம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. மகளுக்கு 50 பவுன், ஹேம்நாத்துக்கு 20 பவுன் நகை போடுவதாக இருந்தது.
சம்பவத்தன்று இரவு தனது மனைவியிடம் சித்ரா பேசியதாகவும் அதன் பிறகு அதிகாலையில் தனது சம்பந்தி ரவிச்சந்திரன் தனக்கு போன் செய்தபோது தான் தூங்கிக் கொண்டிருந்ததால் போனை எடுக்கவில்லை.
அதன் பிறகு காலை எழுந்தவுடன் பேசியபோது ஓட்டலில் சித்ரா தூக்கு போட்டு இறந்துவிட்டதாக தகவலைக் கூறினார். நள்ளிரவில் ஷூட்டிங் முடித்துவிட்டு தனது அறைக்கு வந்த சித்ரா, காரில் உள்ள கவரை எடுத்து வருமாறு ஹேம்நாத்திடம் கூறியதாகவும், அதனால் ஹேம்நாத் வெளியே வந்து கவரை எடுத்து திரும்பவும் அறைக்கு வந்தபோது கதவு உள்புறமாக சாத்தப்பட்டிருந்தது.
ஹேமந்த் பல முறை கதவைத் தட்டியும் சித்ரா கதவைத் திறக்கவில்லை. சித்ராவின் போனுக்கு டயல் செய்தபோதும் சித்ரா போனை எடுக்கவில்லை. பின்பு சில நிமிடங்கள் கழித்து ஹோட்டல் நிர்வாகத்திடம் இருக்கும் மாற்றுச் சாவி மூலமாக அறைக் கதவைத் திறந்து உள்ளே போனபோது சித்ரா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததாக அந்த முதல் தகவல் அறிக்கையில் பதிவாகியுள்ளது.
முதலில் குளித்துவிட்டு உடை மாற்ற வேண்டும் என்று சொல்லி தன்னை வெளியே செல்லுமாறு சித்ரா கூறியதாக ஹேம்நாத் போலீசாரிடம் கூறியதாக தகவல் லீக்கான நிலையில் சித்ராவின் தந்தை அளித்துள்ள இந்தத் தகவலால் போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர்.
சித்ராவின் மரணம் தற்கொலைதான் என மருத்துவர்கள் தெரிவித்தாலும் போலீஸ் நிலையத்தில் இருந்து இன்னும் ஹேம்நாத்தை அனுப்பாமல் போலீசார் தங்களது விசாரணை வளையத்திற்கு உள்ளேயே வைத்திருந்தார்கள். இதே நேரத்தில் கணவராக இருந்தபோதிலும், சித்ராவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள ஹேம்நாத்தை அனுமதிக்க மறுத்துவிட்டார்கள் போலீஸார்.
சித்ரா பயன்படுத்திய 3 செல்போன்களையும், ஹேம்நாத்தின் செல்போனையும் பறிமுதல் செய்த போலீஸார் அதனைச் சோதனை செய்துள்ளனர். சித்ரா தனது தாய்க்கு அனுப்பிய வாட்ஸ்அப் மெஸேஜில் தனது கணவரைவிட்டு தான் பிரியும் வாய்ப்பே இ்ல்லை என்று குறிப்பிட்டிருக்கிறாராம்.
இதேபோல் ஹேம்நாத்தும் சித்ராவுக்கும், அவரது தாய்க்கும் இடையில் பல நாட்களாக பிரச்சினை இருந்து வருவதாகச் சொல்லியிருக்கிறார்.
இந்த நேரத்தில் நேற்று மாலை அம்பத்தூர் துணை கமிஷனரான தீபா சத்யன் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரில் வந்து ஹேமந்திடம் விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து சித்ராவுடன் சீரியலில் நடித்த நடிகர், நடிகைகளிடம் நேற்று போலீஸார் நடத்திய விசாரணையில் ஹேம்நாத் பற்றி அனைவருமே புகார் சொல்லியிருந்தனர். இருந்தாலும் சித்ரா சகஜமாகவே இருந்ததாகவும் சொல்லியிருக்கிறார்கள். ஹேம்நாத்தின் தந்தையிடமும் நேற்றைக்கு விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று 4-வது நாளாகவும் ஹேம்நாத்திடம் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சித்ரா நடித்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் இயக்குநர் சிவசேகர், நடிகர்கள் ஸ்டாலின், சுஜிதா, குமரன், தங்கராஜன் ஆகியோரிடமும் விசாரணை நடைபெற்றது.
நடிகர்கள் வெங்கட், ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சரவணன், விக்ரம் ஆகியோரிடம் இன்று விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிகிறது.