அதிக படங்களில் திரிஷா!

திரிஷா நடிப்பில் வந்த சில படங்கள் எதிர்பார்த்த வசூலை பெறாத நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களும் வெளியாகி மீண்டும் அவரது மார்க்கெட் நிலவரத்தை எகிற வைத்துள்ளது. பிரபல டைரக்டர்கள் அணுகி கதை சொல்கிறார்கள். முன்னணி கதாநாயகர்களும் ஜோடி சேர ஆர்வம் காட்டுகின்றனர்

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க அழைப்புகள் வருகின்றன. தி ரோடு, சதுரங்க வேட்டை 2 ஆகிய படங்களில் நடித்து முடித்து விட்டார். இந்த படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. மலையாளத்தில் மோகன்லாலுடன் ராம் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் பிருந்தா என்ற வெப் தொடரிலும் நடிக்கிறார்.

தமிழில் விஜய் ஜோடியாக நடிக்கும் லியோ படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் முழு படப்பிடிப்பும் முடிய இருக்கிறது. இந்த நிலையில் அஜித்குமார் ஜோடியாக விடாமுயற்சி படத்திலும் நடிக்க திரிஷாவிடம் பேசி வருகிறார்கள். மேலும் 2 புதிய படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்துள்ளன. இந்த வருடம் அதிக படங்களில் நடிக்கும் கதாநாயகியாக திரிஷா மாறி இருக்கிறார்.