டி.எம்.எஸ். வாழ்வில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள்!

மறைந்த பாடகர் டி.எம்.எஸ். வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் சிலவற்றை மூத்த பத்திரிகையாளர் சுரேஸ் யு டியுப் சேனல் ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.

“தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராக தியாகராஜ பாகவதர் கோலோச்சிய காலம். அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி மதுரையில் நடக்க இருந்தது. அந்த இடத்துக்கு பாகவதர் வந்தார். அப்போது அவரத குரல் உள்ளே ஒலித்துக்கொண்டு இருந்தது.

தனது சாயலில் உச்சரிப்பு பிசகாமல் பாடுவது யார் என்ற ஆவலில் பார்த்தார். ஒல்லியான தேகம் கொண்ட ஒரு வாலிபர் பாடுவதை அறிந்து அருகில் சென்றார். வாழ்த்தினார்.அந்த வாலிபர்தான் டி.எம்.எஸ்.

இந்த பாராட்டே அவர் திரைத்துறைக்கு வர உந்துதாக இருந்தது. பாலிவுட் திரை உலகில் பிரபல இசையமைப்பாளரான நவ்ஷாத், டி.எம்.எஸ்ஸை இந்தி படங்களுக்கு பாட பலமுறை அழைத்தும் `எனக்கு தமிழ் போதும்’ என்று மறுத்தார். அவரின் இந்த முடிவை, இந்தி சினிமாவுக்கு பெரும் நஷ்டம் என்று கூறியவர், நவ்ஷாத்.

அதேபோல, டி.எம்.எஸ். பாடலைக் கேட்டு இந்தி பாடகர் முகமது ரபி உருகிவிட்டார். டி.எம்.எஸ்.சின் தொண்டையை வருடி `இங்கிருந்துதானா அந்த கம்பீர குரல் வருகிறது?’ என ஆச்சரியப்பட்டு கேட்டாராம்.